

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமித் ஷா பூரணம் நலம் பெற குஷ்பு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இந்திய அளவில் கரோனா தொற்றால் மாநில முதல்வர்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பாதிக்கப்படும் நிலையும் இருந்து வருகிறது. மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் பல்வேறு மாநிலங்களில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்களும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வெற்றிகரமாக மீண்டுள்ளனர். இதனிடையே இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது அமித் ஷா பூரண நலம்பெற குஷ்பு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரான குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"நம் உள்துறை அமைச்சர் அமித் ஷா விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். விரைவில் நலம் பெற்று வாருங்கள். விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்கிறேன்".
இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு குஷ்பு ஆதரவு தெரிவித்தது தொடர்பாக காங்கிரஸ் கட்சியில் கடும் சலசலப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.