Published : 02 Aug 2020 06:38 PM
Last Updated : 02 Aug 2020 06:38 PM

பயனற்ற நிலையில் கோக்கலாடா பள்ளி: பயன்பாட்டுக்கு வருமா என மக்கள் எதிர்பார்ப்பு

உதகை அருகேயுள்ள கோக்கலாடா பள்ளியை அரசு மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வருமா என 10 கிராம மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

நீலகிரி மாவட்டம், குந்தா தாலுக்கா பாலகொலா ஊராட்சிக்கு உட்பட்ட பெங்கால் மட்டம், மைனலை மட்டம், தேனாடு, கோக்கலாடா, மாசிகண்டி, கோத்திபென், மேரிலேண்ட், சாம்ராஜ், கேரிக்கண்டி ஆகிய கிராமங்களில் சுமார் 2800-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 1957-ம் ஆண்டு முதல் இந்தப் பகுதி மக்களின் கல்வித் தேவையை கோக்கலாடா அரசு மேல் நிலைப்பள்ளி பூர்த்தி செய்து வந்தது.

நீண்டகாலமாகக் கல்விப் பணியாற்றி வந்த பள்ளியில் தமிழகத்தின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள் உட்பட பல்துறை நிபுணர்களை உருவாக்கி புகழ் படைத்தது. பாலகொலா ஊராட்சிக்கு உட்பட்ட 10 ஊர்களில் அரசியல் சமூக, பொருளாதார, கலை, கலாச்சார, பண்பாட்டுக் கூறுகளின் மேம்பாட்டுக்கு வழிவகுத்த கல்விக் கூடமாகும்.

பல்லாயிரக்கணக்கானோர் பயன்பெறக் காரணமாக இருந்த இந்தக் கல்விக் கூடம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாணவர் எண்ணிக்கை குறைவு என்று காரணம் காட்டி மூடப்பட்டது.

தற்போது இந்தப் பள்ளி பராமரிப்பின்றி உள்ளது. பள்ளி வளாகம் முழுவதும் புதர்மண்டிக் காட்சியளிக்கிறது. மேலும், இப்பள்ளிக் கட்டிடம் தற்போது சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. அருகில் உள்ள டாஸ்மாக் கடையிலிருந்து மது வாங்கி வரும் நபர்கள் பள்ளிக் கட்டிடத்துக்குள் நுழைந்து, கல்விக் கூடத்தை மதுக்கூடமாக மாற்றி வருகின்றனர்.

இவர்களின் இந்தச் செயல் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பல்லாயிரம் பேருக்கு கல்விக் கண் திறந்த இப்பள்ளியை அரசு மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

பாலகொலா ஊராட்சி உறுப்பினர் ராஜேஸ்வரி தேவபெட்டன் கூறும் போது, ''நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்காவில் 10 கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்பெற்று வந்த கோக்கலாடா பள்ளி, மாணவர்கள் சேர்க்கை குறைந்ததால் 2 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. தற்போது இப்பள்ளி பயனற்ற நிலையில் உள்ளது. ஒரு பள்ளிக்கூடமாகச் செயல்பட்டால் பல நூற்றுக்கணக்கானோருக்கு கல்வி அளிக்கும் வசதி படைத்த கோக்கலாடா அரசு மேல்நிலைப்பள்ளி, மாற்றுக் கல்வி பயிற்றுக் கூடமாகச் செயல்பட்டாலும் நூற்றுக்கணக்கானோருக்குப் பயிற்சி மேற்கொள்ளலாம்.

ராஜேஸ்வரி தேவபெட்டன்

எனவே, கோக்கலாடா அரசு மேல்நிலைப் பள்ளிக் கட்டிடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து நீலகிரி மாவட்டம் முழுக்க இருக்கிற மக்கள் பயன்பெறும் வகையில் மேற்படிப்பு பயிற்சிக் கூடமாக மாற்றிடவோ அல்லது மகளிர் மேம்பாடு, சிறுவர் பாதுகாப்பு, ஆதரவற்றோர் மற்றும் விளிம்பு நிலை மனிதர்களின் பாதுகாப்புக் கூடமாகவோ மாற்ற வேண்டும். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடமும் முறையிட்டுள்ளோம். கோக்கலாடா அரசு மேல்நிலைப் பள்ளிக் கட்டிடத்தைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

இதுகுறித்து குன்னூர் கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ''கிராமத்தினர் மாணவர் சேர்க்கைக்கு உறுதியளித்தால் மீண்டும் கோக்கலாடா பள்ளியைத் திறக்க பரிசீலிக்கப்படும். இப்பள்ளியை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிதான் முடிவு செய்ய வேண்டும்'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x