

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கரோனா தொற்று உறுதியானது. இன்று காவேரி மருத்துவமனையில் நடத்திய சோதனையில் அறிகுறியற்ற தொற்று உறுதியானதால், ராஜ்பவனில் அவர் தனிமைப்படுத்திக் கொண்டார்.
சென்னை கிண்டி சர்தார் படேல் சாலையில் ஆளுநர் வசிக்கும் ராஜ்பவன் மாளிகை உள்ளது. பல நூறு ஏக்கர் கொண்ட இந்த அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் நேரடியாகவும், வெளிப்புறத்திலும் பணியாற்றுகின்றனர். ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 147 பேருக்குச் சமீபத்தில் கரோனா தொற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 84 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் பொது சுகாதாரத்துறை மூலம் தனிமைப்படுத்தப்பட்டனர்.
சமீபத்தில் ஆளுநர் மாளிகையில் 38 ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 3 பேருக்குக் கரோனா தொற்று உறுதியானது. ஆளுநர் பூரண உடல் நலத்துடன் உள்ள நிலையில், மருத்துவர் ஆலோசனையின்படி 7 நாட்கள் அவர் தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்நிலையில் இன்று காலை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வந்தார். அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர் மாலை 5 மணி அளவில் ராஜபவனுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில் ஆளுநருக்குக் கரோனா சோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது, ஆனால், அறிகுறி எதுவும் தெரியவில்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது.
“ஆளுநருக்குக் கரோனா தொற்று உள்ளது. அறிகுறி எதுவும் இல்லை. அவருக்குக் காவேரி மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு லேசான தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மருத்துவரீதியாக அவர் ஆரோக்கியமாக இருக்கிறார்.
லேசான அறிகுறி உள்ளதால் அவரை ராஜ்பவனில் தனிமைப்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. காவேரி மருத்துவமனையின் மருத்துவர் குழு அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிக்கும்”.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.