

தளர்வற்ற ஊரடங்கு காரணமாக நிகழாண்டு ஆடிப் பெருக்கு நாளில் திருச்சியில் காவிரிக் கரைகள் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.
தமிழ் மாதங்களில் பெண் தெய்வங்களுக்கு உகந்ததாகக் கருதப்படும் ஆடி மாதத்தின் முக்கிய நாளான ஆடி 18-ம் தேதி ஆடிப் பெருக்கு நாளாக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காவிரியாற்றின் கரைகள் மற்றும் படித்துறைகளில் பொதுமக்கள் ஆடிப் பெருக்கு வழிபாடு நடத்துவர்.
படித்துறைகளில் பெண்கள் வாழை இலையில் பழம், பூ, பனை ஓலை, மஞ்சள் கயிறு உள்ளிட்டவற்றை வைத்து தண்ணீருக்கு வழிபாடு நடத்துவர். ஆண்கள், பெண்கள் என அனைவரும் ஒருவருக்கொருவர் புதிய மஞ்சள் கயிறுகளை அணிந்து கொள்வர். புதுமணத் தம்பதிகள் சிறப்பு வழிபாடுகள் செய்து, புதிய தாலிக் கயிறு மாற்றிக் கொள்வதுடன், திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விடுவர்.
ஆடி அமாவாசை, ஆடிப் பெருக்கு ஆகிய நாட்களில் காவிரியின் பிற கரைகளைக் காட்டிலும் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் பல ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வார்கள். இதையொட்டி, அரசுத் துறைகள் சார்பில் பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். அம்மா மண்டபம் மட்டுமின்றி காந்தி, ஓடத்துறை, தில்லைநாயகம், அய்யாளம்மன் உள்ளிட்ட காவிரியாற்றின் பிற படித்துறைகளிலும் மக்கள் வழிபாடு நடத்துவர்.
இதனிடையே, கடந்த மாதம் ஆடி அமாவாசை, ஆடிப் பெருக்கு நாட்களில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் புரோகிதம் கிடையாது என்று மாநகராட்சி, போலீஸ் மற்றும் ஸ்ரீரங்கம் புரோகிதர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை மீறி அம்மா மண்டபம் வருவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸாரும் எச்சரித்திருந்தனர்.
வெறிச்சோடிய காவிரிக் கரைகள்
இந்தநிலையில், தளர்வற்ற ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வெளியே வர முடியாத நிலை இருந்ததால், திருச்சி அம்மா மண்டபம் வெறிச்சோடிக் காணப்பட்டது. இதேபோல், காவிரியின் பிற கரைகளும் வெறிச்சோடிக் கிடந்தன. இருப்பினும், மக்கள் தங்கள் வீடுகளிலேயே ஆடிப் பெருக்கு வழிபாடு நடத்தினர்.
காவிரிக் கரையையொட்டி மிக அருகில் வசிக்கும் வசிக்கும் சிலர், வீட்டிலேயே நீராடிவிட்டு, வீட்டருகே உள்ள படித்துறைகளில் ஆடிப் பெருக்கு வழிபாடு நடத்தினர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, “கரோனா பரலவைத் தடுக்கும் நடவடிக்கையாகவே அம்மா மண்டபம் படித்துறையில் புரோகிதம் கிடையாது என்று அறிவித்துள்ளனர். கடந்த மாதம் ஆடி அமாவாசை நாளிலும் அம்மா மண்டபத்துக்கு மக்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்தநிலையில், தளர்வற்ற ஊரடங்கும் சேர்ந்து கொண்டதால் மக்கள் வெளியே வர முடியாமல் காவிரிக் கரைகள் வெறிச்சோடியுள்ளன. நிகழாண்டு ஆடிப் பெருக்கு கொண்டாட்டம் கரோனாவால் களையிழந்துள்ளது" என்றனர்.