

வீட்டு வாடகை தராததாக அளிக்கப்பட்ட புகாரில் வாடகைதாரரைக் காவல் ஆய்வாளர் தாக்கியதால் மனமுடைந்து அவர் தீக்குளித்ததில் உயிரிழந்தார். இந்நிலையில் ஆய்வாளரைப் பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 24-ம் தேதி முதல் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. வேலையிழந்து வாடும் மக்கள் தினசரி வருமானம் இன்றி வாடி நிற்கும் நிலையில் வீட்டு வாடகை கேட்டு வாடகைதாரர்களைத் துன்புறுத்தக்கூடாது, அவ்வாறு துன்புறுத்தினால் புகார் அளிக்கலாம் என மத்திய அரசு அறிவுறுதியிருந்தது.
இந்நிலையில் வீட்டு வாடகை வசூலிக்கும் விவகாரத்தில் உரிமையாளர் புழல் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அதை எடுத்துக்கொண்டு வாடகைதாரரான பெயிண்டர் ஒருவரின் வீட்டுக்கு ஆய்வாளர் நேரில் சென்று அவரைக் கண்டித்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தால் மனமுடைந்த பெயிண்டர் தீக்குளித்து உயிரிழந்த விவகாரம் புழல் பகுதியில் நடந்துள்ளது. இதில் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
புழல் விநாயகபுரம் பாலவிநாயகர் கோயில் தெருவில் ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் சீனிவாசன் (40) என்கிற பெயிண்டர் வாடகைக்குக் குடியிருந்தார். கரோனா ஊரடங்கு காரணமாக வேலையின்றி இருந்த இவரால் கடந்த 4 மாதமாக வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. பெயிண்டர் சீனிவாசன் வாடகை தராததால் அவர் மீது வீட்டு உரிமையாளர் ராஜேந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரில் தொடர்ந்து நான்கு மாதமாக வீட்டு வாடகை தரவில்லை எனவும், வீட்டைக் காலி செய்ய மறுப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், வாடகை கேட்கும் நேரங்களில் மது அருந்திவிட்டுத் திட்டுவதாகவும் ராஜேந்திரன் புகாரில் குறிப்பிட்டுள்ளார். புகாரைப் பெற்றுகொண்ட காவல் ஆய்வாளர் சாம் பென்சாம், ராஜேந்திரன் வீட்டிற்குச் சென்று வாடகைதாரர் சீனிவாசனிடம் விசாரணை செய்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் மறுநாள் காலை காவல் நிலையம் வர வேண்டும் எனக் கூறிவிட்டு பென்சாம் சென்றதாகத் தெரிகிறது. சிறிது நேரத்தில் சீனிவாசன் தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் முழுவதும் எரிந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே தன்னை ஆய்வாளர் பென்சாம் தாக்கியதாக சீனிவாசன் பேசிய காணொலிப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் சைதாப்பேட்டை 9- வது அமர்வு குற்றவியல் நீதிபதி மோகனம்மாள் சீனிவாசனிடம் வாக்குமூலம் பெற்றார்.
ஆய்வாளர் சாம் பென்சாம் வீட்டு வாடகை விவகாரத்தில் வாடகைதாரரைத் தாக்கியதால் மனமுடைந்து தீக்குளித்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆய்வாளர் பென்சாமைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் உடலில் 86 சதவிகிதம் தீக்காயத்துடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெயிண்டர் சீனிவாசன் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 2.30 மணி அளவில் உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.