Last Updated : 02 Aug, 2020 03:03 PM

 

Published : 02 Aug 2020 03:03 PM
Last Updated : 02 Aug 2020 03:03 PM

பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்ட பிரிமீயத் தொகையைச் செலுத்தி புதுப்பிக்காத புதுச்சேரி அரசு: குற்றம் சாட்டும் திமுக

பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்ட பிரிமீயத்தொகையை செலுத்தி புதுப்பிக்காத புதுச்சேரி அரசால் ஏராளமான ஏழைகள் பாதிப்பில் உள்ளனர். பாதிக்கப்படும் ஏழை நோயாளிகள் குடும்பத்தினர் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தக்கூடும் என்று கூட்டணிக்கட்சியான திமுக குற்றம்சாட்டி எச்சரித்துள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த மாதம் 20ம் தேதி முதல்வர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்தபோது புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் அனைத்து வகையான நோய்களிலிருந்தும் பாதுகாப்பு வழங்கும் பொருட்டும், சிறந்த சிகிச்சை அளிக்கும் பொருட்டும் தற்போது செயல்படுத்தப்படும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தினை மாற்றி அமைத்து புதுச்சேரியிலுள்ள 3.40 லட்சம் குடும்பத்தினரும் பயனடையும் வகையில் அனைவருக்குமான ஒட்டுமொத்த முழு சுகாதார பாதுகாப்பு திட்டம் இந்த ஆண்டே உடனடியாக துவக்கப்பட உள்ளது என்று அறிவித்தார்.

இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி ஒரு வார காலம் கூட நீடிக்கவில்லை. தற்போது ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் மத்திய, மாநில அரசுகள் இணைந்து அமல்படுத்தியுள்ள பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான காப்பீட்டு பிரிமியத்தொகையை செலுத்தி, புதுப்பிக்கவில்லை.

இதுதொடர்பாக அரசை வலியுறுத்தியுள்ள திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்எல்ஏ கூறியதாவது:

புதுச்சேரியில் கடந்த 29ம் தேதியில் இருந்து பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் செயலில் இல்லை. இதனால் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். ஏற்கனவே அதாவது கடந்த 28ம் தேதிக்கு முன்பு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை கொண்டு மருத்துவமனையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட நோயாளிகள் கூட தற்போது அத்திட்டத்தில் பயன் பெற முடியவில்லை.
இதனால் மருத்துவமனை நிர்வாகங்கள் நோயாளிகளிடம் பணத்தை கட்டும்படி வலியுறுத்துகின்றன.

மேலும் அளித்து வந்த சிகிச்சைகளையும் நிறுத்திவிட்டன. பணத்தை கட்டுவதாக ஒப்புக் கொள்பவர்களுக்கு மட்டும் சிகிச்சைகள் அளிப்பதை தொடருகின்றனர். பணத்தை செலுத்த முடியாதவர்களும், தாமதமாக செலுத்துவதாக கூறுபவர்களும் உடனடியாக மருத்துவமனை வளாகத்தை விட்டு விரட்டப்படுகின்றனர்.

பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் செயலிழந்த தினத்தில் இருந்து அந்த அட்டையின் மூலம் சிகிச்சைக்கு சென்று தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்துள்ளவர்களுக்கு உரிய சிகிச்சைக்கான பணத்தை அரசே உடனடியாக வழங்க வேண்டும். இதை செய்ய அரசு தாமதப்படுத்தினார் பாதிக்கப்படும் ஏழை குடும்பத்தினர் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தக்கூடாது. இது அரசுக்கு எச்சரிக்கையாக தெரிவிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x