ஆலங்குடியில் மாரடைப்பால் உயிரிழந்த தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்

ஆலங்குடியில் நேற்று நடைபெற்ற தன் தந்தையின் இறுதிச்சடங்கில் பாதுகாப்பு உடையணிந்து கலந்துகொண்ட கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.
ஆலங்குடியில் நேற்று நடைபெற்ற தன் தந்தையின் இறுதிச்சடங்கில் பாதுகாப்பு உடையணிந்து கலந்துகொண்ட கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த 50 வயதான ஆண் நேற்று முன்தினம் இரவு கடைவீதியில் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்ததில் ஏற்கெனவே அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

இவருக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். கல்லூரி மாணவரான 20 வயதுடைய மகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஜூலை 28-ம் தேதி முதல் புதுக்கோட்டை முத்துலட்சுமி ரெட்டி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், தந்தையின் இறுதிச்சடங்கில் மகனை கலந்துகொள்ளச் செய்யுமாறு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரிக்கு கோரிக்கை விடுத்தனர். அலுவலர்களுடன் ஆலோசித்தபின், பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி அவர் சென்றுவர ஆட்சியர் அனுமதி அளித்தார்.

இதையடுத்து, மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் பாதுகாப்பு உடை அணிந்தபடி நேற்று வீட்டுக்கு சென்ற இளைஞர், தன் தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர், அங்கிருந்து மயானத்துக்கு சென்று தந்தையின் உடலுக்கு கொள்ளி வைத்துவிட்டு மீண்டும் மருத்துவமனைக்கு சென்றார். யாரிடமும் பேசவோ, யாரையும் தொடவோ அவர் அனுமதிக்கப்படவில்லை.

கரோனாவால் பாதிக்கப்பட்டவரைக் கண்டால் ஓடி ஒளியும் இச்சூழலில், முன்மாதிரி நடவடிக்கையாக தந்தையின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்ய கரோனா பாதித்த மகனை அனுமதித்த அலுவலர்களின் மனிதநேய செயலை பொதுமக்கள் பாராட்டினர்.

இதுகுறித்து மாவட்ட கரோனா தடுப்பு தொடர்பு அலுவலர் ஆர்.கார்த்திக் தெய்வநாயகம் கூறியது:

தந்தை உயரிழந்ததால் அவரது மகன் கடுமையான மன உளைச்சலில் இருந்தார். தந்தைக்கு இறுதியாக செலுத்த வேண்டிய கடமையை செலுத்தாவிட்டால் ஆயுள் முழுக்க அவருக்கு அந்த குற்ற உணர்வு இருக்கும். அதுவே பின்னாளில் மனநோயாகவும் மாறும். இதைத் தடுக்கவும், கரோனா தொற்றில் இருந்து விரைந்து குணமடைந்து செல்லவும், பாதுகாப்பு நடவடிக்கையைப் பின்பற்றி தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள மனிதநேய அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டது. முறையான அனுமதி பெற்று மருத்துவமனையில் இருந்து பாதுகாப்பு உடையுடன் அவர் சென்று தந்தைக்கு அஞ்சலி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in