

ஆடிப் பெருக்கை முன்னிட்டு ஆத்தூரில் ஜவுளி மற்றும் மளிகை பொருட்களை வாங்க கடைகளில் மக்கள் குவிந்தனர். மேலும், வாடிக்கையாளர்களிடம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்த தவறிய இரு ஜவுளிக்கடை மற்றும் மளிகை கடைக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தமிழகத்தில் காவிரி உள்ளிட்ட நீர்நிலைகள் உள்ள பகுதியில் ஆண்டுதோறும் ஆடி 18-ம் நாள் ஆடிப் பெருக்கு பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுவது வழக்கம். குறிப்பாக புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு புத்தாடைகள் வழங்கி, இறைவழிபாட்டில் ஈடுபடுவதும், வீடுகளில் அறுசுவை உணவுகளை சமைத்தும் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்வது வழக்கம்.
இந்தாண்டு ஆடிப் பெருக்கு இன்று (2-ம் தேதி) கரோனா முழு ஊரடங்கு நாளில் வருவதால், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நீர் நிலைகளில் மக்கள் நீராடவும், வழிபாடு நடத்தவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இருந்தபோதும் வீடுகளில் ஆடிப் பெருக்கை கொண்டாட நேற்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கவும், புதுமணத் தம்பதிகள், குழந்தைகளுக்கு ஜவுளிகள் வாங்கவும் பொதுமக்கள் ஜவுளி மற்றும் மளிகைக் கடைகளிலும் குவிந்தனர்.
ஆத்தூரில் சுற்று வட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் ஆடிப் பெருக்கு தேவையான பொருட்களை வாங்க கடை வீதிகளில் குவிந்தனர்.
இதனால், கடை வீதி களைகட்டியது. இதனிடையே, கடைகளில் குவிந்த மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கத் தவறினர். வியாபாரிகளும் இது குறித்து அலட்சியம் காட்டினர், சில கடைகளில் கரோனா கட்டுப் பாடுகளை பின்பற்றவில்லை.
தகவல் அறிந்த ஆத்தூர் நகராட்சி ஊழியர்கள் ஆய்வு செய்து சமூக இடைவெளி மற்றும் கரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றத் தவறிய இரு ஜவுளிக் கடைகள் மற்றும் ஒரு மளிகைக் கடைக்கு சீல் வைத்தனர். மேலும், பொதுமக்களிடம் சமூக இடைவெளியைப் பின்பற்றவும், அனைவரும் முகக் கவசம் அணியவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.