

கரூர் மாவட்டத்தில் காவல் உதவிஆய்வாளர், பிறந்து 1 நாளான ஆண் குழந்தை உள்ளிட்ட 19 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஒற்றை இலக்கத்தில் இருந்து கரோனா தொற்று கடந்த சில நாட்களாக இரட்டை இலக்கத்திற்கு உயர்ந்து, கடந்த ஜூலை 29ம் தேதி 29, ஜூலை 30ம் தேதி 31, ஜூலை 31ம் தேதி 28, ஆக. 1ம் தேதியான நேற்று 24, இன்று (ஆக. 2ம் தேதி) 19 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையும் 500 தாண்டியுள்ளது.
கரூர் மாவட்டம் தென்னிலை காவல் நிலையத்தில் பணிபுரியும் 55 வயதான உதவி ஆய்வாளர் அரவக்குறிச்சி காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். கடந்த 31ம் தேதி திருச்சி காவலர் பயிற்சி பள்ளிக்கு சென்றப்போது கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று வெளியான முடிவில் அவருக்கு கரோனா தொற்று உறுதியானதால் தென்னிலை காவல் நிலையம், அரவக்குறிச்சி காவலர் குடியிருப்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
கரூர் வெங்கமேட்டை சேர்ந்த கர்ப்பிணிக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட பெண்ணுக்கு நேற்று முன்தினம் ஆண் குழந்தை பிறந்தது. பிறந்து ஒரு நாளேயான அக்குழந்தைக்கு நேற்று நடத்தப்பட்ட கரோனா பரிசோதனை முடிவு இன்று வெளியானது. அதில் அக்குழந்தைக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
கரூர் காந்திகிராமத்தைச் சேர்ந்த 6 மாத பெண் குழந்தை, அதன் 24 வயதான தாய், 52 வயது பாட்டி ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கும், பழையஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த 96 வயது முதியவர் என இன்று ஒரே நாளில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கரூர் மாவட்டத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 551 ஆக உயர்ந்துள்ளது.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 162 பேர், பிற மாவட்டங்களை சேர்ந்த 9 பேர் என மொத்தம் 171 பேர் சிகிச்சையில் உள்ளனர்.