250 நாட்களுக்குப் பிறகு மரக்கூண்டில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்ட ‘அரிசி ராஜா’ யானை

 வரகளியாறு முகாமில் திறந்தவெளியில் பராமரிக்கப்படும் ‘அரிசி ராஜா’ யானை.
 வரகளியாறு முகாமில் திறந்தவெளியில் பராமரிக்கப்படும் ‘அரிசி ராஜா’ யானை.
Updated on
1 min read

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த அர்த்தனாரிபாளையம் பகுதியில் பயிர்களுக்கு சேதம் விளைவித்ததுடன், 8 மனித உயிரிழப்புகளுக்கும் காரணமான 19 வயதுடைய காட்டு யானை, கடந்த ஆண்டு நவம்பர் 13-ம் தேதி வனத்துறையினரால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

வீட்டு சமையலறைகளை சேதப்படுத்தி அரிசியை விரும்பி தின்றதால், இந்த யானையை ‘அரிசி ராஜா’ என பொதுமக்கள் அழைத்தனர். வனத்துறையினர் ‘முத்து’ என பெயரிட்டு, ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகத்தில் உள்ள வரகளியாறு முகாமில் மரக்கூண்டில் அடைத்துவைத்து யானையை பராமரித்துவந்தனர். இதற்காக நியமிக்கப்பட்ட 2 பாகன்கள், யானையை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பயிற்சி அளித்தனர்.

இதில் முன்னேற்றம் ஏற்பட்டதால், 250 நாட்களுக்குப் பிறகு கடந்த 21-ம் தேதி கூண்டிலிருந்து யானை வெளியில் கொண்டுவரப்பட்டது. கால்களில் சங்கிலி கட்டப்பட்ட நிலையில், சுற்றிலும் 5 யானைகளின் பாதுகாப்புடன் திறந்தவெளியில் கடந்த 10 நாட்களாக பராமரிக்கப் பட்டுவருகிறது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘கூண்டில் பாகன்களின் கட்டளைக்கு கீழ்படிந்த யானை, திறந்தவெளியில் கீழ்படியவும், பிற வளர்ப்பு யானைகளுடன் இணக்கமாக பழகவும் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in