Last Updated : 02 Aug, 2020 09:55 AM

 

Published : 02 Aug 2020 09:55 AM
Last Updated : 02 Aug 2020 09:55 AM

உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம்; கடலூர் அருகே மீனவர் படுகொலை

உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட பகை காரணமாக கடலூர் அருகே மீனவ கிராமத்தில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். அதன் விளைவாக படகுகள், வீடுகள், வாகனங்கள் எரிக்கப்பட்டதால் மீனவ கிராமங்களில் பதற்றம் நிலவுகிறது.

கடலுார் அருகேயுள்ளது தாழங்குடா மீனவ கிராமம். சுனாமியால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்த கிராமத்தை பார்வையிட அப்போதைய அமெரிக்கா அதிபர் பில் கிளிண்டன் நேரில் வந்து மீனவ மக்களைப் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அரசு மற்றும் தனியார் உதவியால் அந்த கிராமம் மெல்ல மெல்ல மீண்டு வந்தது.

இயற்கை அழகும், அமைதியும் நிலவும் இந்த கிராமத்தில் இரு தரப்புக்கு இடையே பகையை பற்றவைத்தது சில மாதங்களுக்கு முன்பாக நடந்த உள்ளாட்சித் தேர்தல். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாசிலாமணிக்கும், தற்போதைய ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி மதியழனுக்கும் இடையே தேர்தல் காரணமாக பகை மூண்டது.

உப்பலவாடி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மாசிலாமணியின் மனைவி பிரவீனாவும், மதியழகன் மனைவி சாந்தியும் போட்டியிட்டனர். கடும் போட்டிக்கு நடுவே சாந்தி வெற்றி பெற்றார். இதனால் ஏற்பட்ட விரோதம் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் இரு தரப்புக்கு இடையே மோதல் வெடித்தது. போலீஸார் தலையிட்டதால் அப்போது பிரச்சினை பெரிதாகாமல் முடித்துவைக்கப்பட்டது.

இந்த நிலையில், நீறுபூத்த நெருப்பாக இருந்த பகை நேற்று கொழுந்து விட்டு எரிந்தது. மாசிலாமணியின் தம்பி மதிவாணன் (36) நேற்று இரவு 9:30 மணி யளவில், கண்டக்காட்டில் இருந்து தாழங்குடாவிற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழிமறித்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு, தப்பிச் சென்றது. இந்த தகவலறிந்த மதிவாணனின் ஆதரவாளர்கள் ஒன்று கூடினர்.

மதிவாணன் கொல்லப் பட்டதை அறிந்து ஆவேசமடைந்த அவர்கள், தாழங்குடா கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மதியழகன் மற்றும் அவரது தரப்புக்குச் சொந்தமான மீன்பிடி படகுகள், வலைகள் மற்றும் கடைகள், கிடங்குகளுக்குத் தீ வைத்தனர். அத்துடன் மதியழகன் தரப்பினரின் வீடுகளையும், வாகனங்களையும் அடித்து நொறுக்கினர்.

இதனால் தாழங்குடா கடற்கரைப் பகுதி நெருப்பு வளையமாக காட்சியளித்தது. தகவல் அறிந்ததும் அங்கு வந்த கடலுார் தீயணைப்புத் துறையினர் கடுமையாகப் போராடி தீயை அணைத்தனர். இந்த கலவரத்தில் இருபதுக்கும் மேற்பட்ட படகுகள், பல லட்சம் மதிப்புள்ள மீன் பிடி வலைகள், பத்துக்கும் மேற்பட்ட வீடுகள், ஒரு மாருதி வேன், பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன.

விழுப்புரம் சரக டிஐஜி-யான எழிலசரன், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ், துணைக் காவல் கண்காணிப்பாளர் சாந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ கிருபாகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அமைதி திரும்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அப்பகுதியில் மேலும் வன்முறை தொடராமல் இருக்க போலீசார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட மதிவாணன் உடல் கடலுார் அரசு மருத்துவமனையில் உள்ளது. இன்று பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

கொலை தொடர்பாகவும், அதனைத் தொடர்ந்து நடந்த வன்முறைகள் தொடர்பாகவும் தேவனாம்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x