

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட 10 போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் சிலருக்கு கரோனா ஏற்பட்டதால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. கடந்த 28-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விசாரணையின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் விசாரணையை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளனர். மதுரையில் இருந்து 4 சிபிஐ அதிகாரிகள் நேற்று மதியம் 12.30 மணியளவில் சாத்தான்குளம் வந்தனர். கீழ ரதவீதியில் உள்ளஅலுவலகத்தில் வைத்து, பென்னிக்ஸின் நண்பர்களான வழக்கறிஞர்கள் ராஜாராம், ரவிச்சந்திரன் மற்றும் சங்கரலிங்கம், ரவிசங்கர், சுடலைமுத்து, நாகராஜன் ஆகிய 7 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். மாலை 4.30 மணி வரை சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்திய பின்னர் சிபிஐ அதிகாரிகள் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றனர்.