Published : 02 Aug 2020 07:49 AM
Last Updated : 02 Aug 2020 07:49 AM

ஜெயலலிதாவின் வேதா நிலையத்தில் உள்ள நகைகளை தொட யாருக்கும் உரிமை இல்லை: தங்களிடம் ஒப்படைக்கக் கோரி ஜெ.தீபா கூடுதல் மனு

ஜெயலலிதா பயன்படுத்திய நகை, கலைப் பொக்கிஷங்களை தொட யாருக்கும் உரிமை இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் ஜெ.தீபா வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை போயஸ் தோட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலையத்தை தமிழக அரசு அரசுடமையாக்கியது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஜெ.தீபா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், அந்த வழக்கில் ஜெ.தீபா தாக்கல் செய்துள்ள கூடுதல் மனுவில் கூறியிருப்பதாவது:

1971-ல் என் பாட்டி சந்தியா இறப்பதற்கு முதல் நாளில் வேதா நிலையம் இல்லத்தை உயில் மூலமாக அத்தை ஜெயலலிதா பெயருக்கு எழுதிக் கொடுத்துள்ளார். அது, என் அத்தை ஜெயலலிதா உணர்வுப்பூர்வமாக வாழ்ந்த இல்லம். என் பெற்றோர் வேதா நிலையத்தில் எனதுஅத்தையுடன் வசித்துள்ளனர்.

ஆனால், சட்டப்பூர்வ வாரிகளான எங்களது சம்மதம் இல்லாமல், அந்த இல்லத்தை அரசுடமையாக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இது சட்டவிரோதம். நிலஆர்ஜித நடைமுறைகளை அரசு முறையாக மேற்கொள்ளவில்லை. அத்தையின் மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய விசாரணை நிலுவையில் உள்ளது. வேதா நிலையத்தில் இருந்துதான் என் அத்தை அப்போலோ மருத்து
வமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வேதா நிலையத்தை அரசுடமையாக்கினால் அத்தை இறப்பில் தொடர்புடைய முக்கிய தடயங்கள் அழிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

என் அத்தை தனிப்பட்டமுறையில் பயன்படுத்திய ஆடைகள், ஆபரணங்களைக் கூட கையகப்படுத்தியிருப்பது பெண்களின் மாண்பை சீர்குலைப்பது மட்டுமின்றி அநாகரிகமானது. அவர் தன் பொறுப்பில் வைத்திருந்த கலைப் பொக்கிஷங்கள், மைசூர் அரண்மனையில் உள்ள முன்னோர்களால் என் பாட்டிக்கு வழங்கப்பட்டவை. அவற்றை தொட யாருக்கும் உரிமை இல்லை. அவற்றை காட்சிப்படுத்தவும் முடியாது. எனவே, நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நான், எனது கணவர், சட்டப் பிரதிநிதிகள், பொறியாளர்கள், நகை மதிப்பீட்டாளர்களுடன் வேதா நிலையத்துக்குள் சென்று நகைகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யவும், அவற்றை எங்களிடம் ஒப்படைக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x