

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று ஏற்பட்டு பள்ளி துணை ஆய்வாளர் உள்ளிட்ட மேலும் 4 பேர் இன்று உயிரிழந்தனர். மாவட்டத்தில் மேலும் 243 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. தினமும் சராசரியாக 250 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்டத்தில் இன்று மேலும் 243 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7,350 ஆக அதிகரித்துள்ளது.
விளாத்திகுளம் டிஎஸ்பி பீர் முகைதீனுக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் திருநெல்வேலியில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மாவட்டத்தில் இன்றும் கரோனாவுக்கு 4 பேர் பலியாகியிருக்கின்றனர். தூத்துக்குடி அருகேயுள்ள முடிவைத்தானேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் எம்.தர்மராஜ் (50). மாவட்ட கல்வி அலுவலகத்தில் பள்ளி துணை ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கரோனா தொற்று காரணமாக கடந்த 27-ம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று காலை 10.15 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், துரையூரை சேர்ந்த 52 வயது ஆண், இளவேளங்காலை சேர்ந்த 70 வயது ஆண், தூத்துக்குடி பெரிய கோயில் தெருவை சேர்ந்த 74 வயது ஆண் ஆகிய 3 பேரும் கரோனா தொற்று காரணமாக இன்று உயிரிழந்தனர்.
இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவுக்கு இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 5,183 பேர் குணமடைந்துள்ளனர். 2,116 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.