

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் முதல்வர் அறிவித்து ஓராண்டாகியும் தரைப்பாலம் அமைக்கும் பணி தொடங்காததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
மானாமதுரை நகரை வைகை ஆறு இரண்டாக பிரிக்கிறது. இருபுறமும் உள்ள மக்கள் வைகை ஆற்றைக் கடக்கவும், வாகன போக்குவரத்திற்காகவும் அண்ணாசிலை- குண்டுராயர் தெரு ஆகிய பகுதிகளை இணைத்து வைகை ஆற்றில் மேம்பாலம் அமைக்கப்பட்டது.
அதேபோல் மானாமதுரை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின்போது தல்லாகுளம் முனியான்டி கோயில்- அரசகுழி ஆகிய பகுதிகளை இணைத்து மற்றொரு மேம்பாலம் அமைக்கப்பட்டது.
இப்பாலம் நகரில் இருந்து சற்று தொலைவில் உள்ளதால் உள்ளூர் மக்கள் அதிகம் பயன்படுத்துவதில்லை. நகருக்குள் வரவிரும்பாத கனரக வாகனங்கள் மட்டுமே செல்கின்றன.
இதனால் அண்ணா சிலை- குண்டுராயர் தெரு பகுதிகளை இணைக்கும் மேம்பாலத்தை மட்டுமே அதிகளவில் பயன்படுத்துகின்றனர். மேலும் ஆற்றில் தண்ணீர் செல்லும் காலங்களில் இப்பாலத்தில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மற்ற காலங்களில் ஆற்றுக்குள் ஆங்காங்கே தற்காலிக பாதை அமைத்து மக்கள் சென்று வருகின்றனர்.
இதையடுத்து கன்னார்தெரு- பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் ஆற்றில் தரைப்பாலம் அமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்தது. இடைத்தேர்தலில் அதிமுக, திமுக இருகட்சிகளும் நிறைவேற்றுவதாக உறுதியளித்தன.
அதிமுக வெற்றி பெற்றதை அடுத்து, ‘கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ. 9 கோடியில் 330 மீ., நீளத்தில் தரைப்பாலம் கட்டப்படும்,’ என கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்துள்ளார். நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டநிலையில் பணிகள் தொடங்காததால் மானாமதுரை மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கரோனாவால் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது,’ என்று கூறினார்.