மீன்வளத்துறை அமைச்சர் உறுதியை ஏற்று ராமேசுவரம் மீனவர்கள் போராட்டம் வாபஸ்

பட விளக்கம்: ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள்.
பட விளக்கம்: ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள்.
Updated on
1 min read

மீன்வளத்துறை அமைச்சர் உறுதியைத் தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்களின் தொடர் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிப்பதை கண்டித்தும், ஜூலை 20-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடித் தொழிலுக்குச் செல்லவில்லை.

இந்நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமாரிடம் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு அமைச்சர், மானியத்தை கழித்துக் கொண்டு மீனவர்களுக்கு டீசல் வழங்க உறுதியளித்தார்.

இதனைத்தொடர்ந்து ராமேசுவரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனைக் கூட்டம் மீனவர் சங்கத் தலைவர் எஸ்.எமரிட் தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சரின் உத்தரவாதத்தை தொடர்ந்து நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் வழக்கம் போல மீன்பிடிக்கச் செல்லலாம் என முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் பத்து நாட்களுக்கு மேலாக நீடித்து வந்த மீனவர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது.

இதுகுறித்து மீனவர் சங்கத் தலைவர் செல்வராஜ் கூறும்போது, "அமைச்சரின் உறுதியைத் தொடர்ந்து நாங்கள் மீன்பிடிக்கச் செல்லலாம் என்று முடிவு செய்துள்ளோம்.

மீனவர்கள் டீசல் வாங்கும் நிலையங்களில் உள்ள பழைய மின் மோட்டார்களை மாற்றிவிட்டு புதிய தொழில்நுட்பத்தை டீசல் நிரப்பும் வங்கிகளில் செயல்படுத்த வேண்டும் , இதன் மூலம் சரியான அளவு டீசல் கிடைக்க ஏதுவாக இருக்கும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in