

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கரோனாவுக்குச் சிகிச்சை அளிக்க சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்படும் என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்றுக்கு சித்த மருத்துவ முறைப்படி, சென்னை ஜவஹர் பொறியியல் கல்லூரி, அம்பேத்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களிலும், மற்ற சில மாவட்டங்களிலும் அரசு சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகம் முழுவதும் இதனை விரிவுபடுத்த வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஆக.1) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்திய மருத்துவத்துறை சார்பில், பிரத்யேகமான சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்க முதல்வர் பழனிசாமி அனுமதி அளித்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் ஆயுஷ் மருத்துவர்கள் முன்னின்று சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும்.
புதுக்கோட்டை மாவட்டத்திலும் 100 படுக்கைகளுடன் சித்த மருத்துவ சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், எல்லா மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்படும். ஏற்கெனவே தமிழகத்தில் 18 பிரத்யேகமான சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.