

அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோயிலுக்கு மயிலாடுதுறையில் இருந்து புனித நீரும், காவிரி மண்ணும் இன்று அனுப்பப்பட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் கோயில் கட்ட ஏற்பாடு செய்யப்பட்ட பணிகள் நிறுத்தப்பட்டன. அதன்பின் கடந்த ஜூன் மாதத்திலிருந்து ராமர் கோயில் கட்டுமானத்துக்கான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா ஆகஸ்ட் 5-ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ளது. இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள புனிதத் தலங்களில் இருந்து புனித நீரும், அப்பகுதி மண்ணும் எடுத்துச் செல்லப்படுகின்றன.
அதன்படி ராமர் கோயிலுக்காக புராண, புண்ணியப் பெருமை கொண்ட மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் இருந்து புனித நீரும், காவிரி மண்ணும் எடுக்கப்பட்டன. அவற்றுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு இன்று அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாநில துணைத் தலைவர் வாஞ்சிநாதன், மயிலாடுதுறை நகர பாஜக தலைவர் மோடி கண்ணன் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.