Published : 01 Aug 2020 12:38 PM
Last Updated : 01 Aug 2020 12:38 PM

ஆதரவற்ற இல்லங்களை அரவணைக்கும் சலூன் கடைக்காரர்: கரோனா ஊரடங்கிலும் இலவசமாக முடிதிருத்தம் செய்கிறார்

மதுரை

ஆதரவற்ற இல்லத்தில் வசிப்போருக்கு இலவசமாக முடித்திருத்தம் செய்யும் சலூன் கடைக்காரர், கரோனா தொற்று அச்சுறுத்தும் இந்த ஊரடங்கு நேரத்திலும் தேடிச் சென்று இந்த சேவையை தடைபடாமல் செய்து நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறார்.

சமூகத்தின் விளிம்புநிலை தொழில் செய்து தங்கள் செயல்பாடுகளால் உச்சத்திற்கு உயர்ந்தவர்கள் பலர் இருக்கலாம். ஆனால், அவர்களில் மிக சிலரே தாங்கள் கடந்த வந்த பாதையை மறக்காமல் இந்த சமூகத்திற்கும், தங்களைப் போல் உயரத்துடிக்கும் மனிதர்களுக்கும் உதவியாக இருப்பார்கள்.

அப்படிப்பட்டவர்களில் மதுரை கே.கே.நகர் சலூன் கடைக்காரர் எம்.வீரக்குமார் முக்கியமானவர்.

ஆரம்பகாலத்தில் இவர் அன்றாட வாழ்வாதாரத்திற்கே மிகுந்த கஷ்டப்பட்டவர். கை தூக்கிவிட ஆளில்லாமல் நிர்க்கதியாகி மனம் உடைந்துபோய் நின்றுள்ளார். முகம் தெரியாதவர்கள் செய்த உதவியால் சொந்தமாக சலூன்கடை வைத்துள்ளார்.

தற்போது அது பல்கிப் பெருகி மதுரை மாநகரில் ஐந்து இடங்களில் கிளைகள் வைக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.

ஆனால், தன்னுடைய பிந்தைய கால வாழ்க்கையை மறக்காமல் ஆதரவற்ற இல்லக் குழந்தைகளுக்கு மாதந்தோறும் இவரும், இவரது கடை ஊழியர்களும் தேடிச் சென்று முடித்திருத்தம் செய்கிறார்.

தற்போது கரோனா ஊரடங்கு நேரத்திலும் இவர்கள், வழக்கம்போல் அந்த இல்லங்களுக்கு தேடிச் சென்று இந்த சேவையை தடைபடாமல் செய்து வருகிறார்கள்.

மதுரையில் உள்ள 4 ஆதரவற்ற குழந்தைகள் இல்லம், முதியோர் இல்லங்களுக்குத் தேவையான அரிசி, அவர்களுக்குத் தேவையான பேஸ்ட், பிரஸ், சோப்பு வாங்கிக் கொடுப்பதைக் கடமையாகக் கொண்டுள்ளார்.

அவர் கூறுகையில், ‘‘என்னோட இந்த வாழ்வுக்கு முகம் தெரியாதவர்கள் செய்தவர்கள் உதவியே காரணம். அதை மறக்காமல் இருக்கவே முகம் தெரியாத ஆதவற்ற குழந்தைகள், முதியோர்களுக்கு உதவுவதை ஒரு சேவையாக செய்கிறேன்.

மாதந்தோறும் வாடிக்கையாக செய்யும் உதவிபோக, அவர்கள் கேட்கும் அவசர உதவிகளையும் மறக்காமல் செய்கிறேன். கரோனா ஊரடங்கு இல்லாத கடந்த காலத்தில் ஆதரவற்ற இல்லங்களில் பராமரிக்கப்படும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், நடக்க முடியாதவர்களுக்கு நானும், என் கடை ஊழியர்களும் நேரடியாகச் சென்று முடித்திருத்தம் செய்தோம்.

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் ஆதரவற்ற சிறுவர்கள், இளைஞர்கள் நேரடியாக எங்கள் கடைக்கு வந்து இலவசமாக முடித்திருத்தம் செய்து சென்றனர். தற்போது கடைகள் திறக்கப்படாததால் அனைவருக்கும் நேரடியாகச் சென்று முடிதிருத்தம் செய்கிறோம்.

இந்த சேவையை அந்த ஆதரவற்ற இல்ல நிர்வாகிகளும், அங்கு பராமரிக்கப்படும் குழந்தைகளும் மறக்காமல் எனக்காகவும், என் குடும்பத்திற்காகவும் பிரார்த்திப்பது இன்னும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்துகிறது, ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x