Published : 01 Aug 2020 12:37 PM
Last Updated : 01 Aug 2020 12:37 PM

கடந்த ஆண்டு தேர்வான இரண்டாம் நிலை காவலர்களில் 10,000 பேரை உடனடியாக பணியில் நியமிக்க வேண்டும்: அரசுக்கு வைகோ கோரிக்கை

இரண்டாம் நிலை காவலர் காலிப் பணியிடங்களுக்கு 2019இல் தேர்வானவர்களில் 20,000 பேரில் 8,538 பேர் நியமனம் போக மீதமுள்ளவர்களை இந்த ஆண்டுக்குத் தேவைப்படும் 10,000 பணியிடங்களுக்குத் தகுதியானவர்களை நியமித்திட வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை:

''தமிழக அரசு 2019-20 ஆம் நிதி ஆண்டில் 8,888 இரண்டாம் நிலை காவலர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டது. நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்ற இப்போட்டித் தேர்வில், 20 ஆயிரம் பேர் இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டு, அதில் மதிப்பெண்கள் அடிப்படையில் 8,538 பணியிடங்களுக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுவிட்டனர்.

நடப்பு 2020-21 நிதி ஆண்டில், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தி, மேலும் 10 ஆயிரம் இரண்டாம் நிலை காவலர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு அறிவித்தது.

கொடிய கரோனா நோய்த் தொற்றால் ஆயிரக்கணக்கான காவலர்கள் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உடனடியாகக் காவலர்களை நியமித்திட வேண்டிய அவசர அவசியம் ஏற்பட்டுள்ளது. புதிதாக காவலர்களை நியமிக்க விண்ணப்பித்து, பலகட்டத் தேர்வுகளை நடத்தி, தேர்வு செய்வதற்கு உகந்த சூழ்நிலை தற்போது இல்லை.

எனவே, ஓராண்டுக்கு முன்பு அனைத்துச் சுற்றுகளிலும் தேர்ச்சி பெற்று, காலிப் பணியிடம் இல்லாததால் பணியில் சேர இயலாமல் காத்திருக்கின்ற 20 ஆயிரம் பேரில், ஏற்கெனவே தேர்வான 8,538 பேரைத் தவிர்த்து, எஞ்சியுள்ள சுமார் 11,500 பேருக்கு மருத்துவத் தகுதிச் சான்றை மட்டும் உறுதி செய்து, அதில் தகுதியான 10 ஆயிரம் பேரைத் தேர்வு செய்து, பணி ஆணை வழங்கிட முன்வருமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இதற்கு முன்னரும் பல்வேறு ஆண்டுகளில், இதுபோன்ற முறையில் கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்பட்ட முன் உதாரணங்கள் இருக்கின்றன என்பதைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்''.

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x