Published : 01 Aug 2020 12:04 PM
Last Updated : 01 Aug 2020 12:04 PM

தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: தனி மனித இடைவெளியுடன் தொழுகை

தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் தியாகத் திருநாள் என்றழைக்கப்படும் பக்ரீத் பண்டிகையை இன்று கொண்டாடி வருகின்றனர். பொதுவெளியில் தொழுகை நடத்த அனுமதி இல்லாததால் அவரவர் இல்லங்களில் தொழுகை நடத்தினர்.

ரமலான், பக்ரீத் பண்டிகைகள் இஸ்லாமியர்களின் வாழ்வில் மிக முக்கியமானவை. ஐந்து கடமைகளில் ஒன்றான நோன்பிருத்தலை 30 நாட்கள் கடைப்பிடித்து பின்னர் ஈகைத் திருநாள் என்றழைக்கப்படும் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும். இதற்கு அடுத்தபடியாக இஸ்லாமியர்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகை தியாகத் திருநாள் என்றழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை.

இறுதி நபி முகமது நபிக்கு முன்னர் இருந்த நபிகளில் இப்ராஹிம் என்பவர் இறைவனிடம் பிரார்த்தனை செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்ற தனது மகனைப் பலியிடும்போது, மகனுக்குப் பதில் ஆட்டைப் பலியிட இறைவன் அருளினார் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. மகனைப் பலியிட்டு, பிரார்த்தனை செய்யத் துணிந்த நபி இப்ராஹிமின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் தியாகத் திருநாளாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் இஸ்லாமியர்கள் தங்கள் வேண்டுதல் மற்றும் கடமையாக ஆட்டை அறுத்துப் பலி கொடுத்து அதன் மாமிசத்தை உறவினர், நண்பர்கள், ஏழைகளுக்கு அளித்து மகிழ்வர். ஒவ்வொரு நாட்டுக்கேற்ற வகையில் மாடு, ஒட்டகம் எனவும் பலியிடப்படுகிறது. இந்த மாதத்தில்தான் இஸ்லாமியர்கள் ஐந்து கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமையை நிறைவேற்ற மெக்காவுக்குப் புனிதப் பயணம் மேற்கொள்வார்கள்.

கரோனா பாதிப்பால் ரமலான் பண்டிகை நேரத்தில் தராவிஹ் எனப்படும் இரவு நேர கூட்டுத்தொழுகை, பள்ளிவாசல்களில் நோன்பு திறப்பது உள்ளிட்டவற்றிற்குத் தடை விதிக்கப்பட்டது. பண்டிகை அன்று பொது இடத்தில், பள்ளிவாசல்களில் நடக்கும் சிறப்புத் தொழுகைக்கும் தடை விதிக்கப்பட்டு வீடுகளில் தொழுகை நடத்த அரசு அறிவுறுத்தியது.

அதன்பின்னரும் கரோனா தொற்று குறையாத நிலையில் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் சிறப்புத் தொழுகை நடைபெறவில்லை. அவரவர் இல்லங்களில் தனியாக அல்லது மொட்டை மாடி உள்ளிட்ட இடங்களில் உறவினர்கள், நண்பர்கள் தனிமனித இடைவெளியுடன் தொழுகை நடத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x