அதிமுக உறுப்பினர் சேர்க்கை படிவங்களை ஆக. 10-க்குள் ஒப்படைக்க வேண்டும்: ஓபிஎஸ், இபிஎஸ் உத்தரவு

அதிமுக உறுப்பினர் சேர்க்கை படிவங்களை ஆக. 10-க்குள் ஒப்படைக்க வேண்டும்: ஓபிஎஸ், இபிஎஸ் உத்தரவு

Published on

அதிமுக உறுப்பினர் சேர்க்கையை முடித்து அந்தப் படிவங்களை ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பு:

அதிமுக சட்ட விதிகள்படி கட்சியில் ஏற்கெனவே உறுப்பினர்களாக உள்ளவர்களின் பதிவை புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்த்தலுக்கான நிறைவுப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

அவகாசம் நீட்டிப்பு இல்லை

கட்சியில் ஏற்கெனவே உறுப்பினர்களாக இருந்து பதிவை புதுப்பிக்காதவர்கள் மற்றும் விடுபட்ட உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பதற்காக, கட்சியின் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டச் செயலாளர்கள், தலைமை அலுவலகத்தில் இருந்து பெற்றுச் சென்ற உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்களை உடனடியாக பூர்த்தி செய்துஉரிய கட்டணத்துடன், ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் தலைமை அலுவலகத்தில் சேர்க்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும்கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது.

எனவே, மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சியின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பினர் சேர்ப்பு பணியில் முழுமையாக ஈடுபட்டு, உரிய காலத்துக்குள் இப்பணியை செய்து முடிக்க வேண்டும்.

உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை பெற்றுள்ள கட்சித் தொண்டர்கள் மட்டுமே நடக்கவுள்ள கட்சியின் அமைப்புத் தேர்தலில் போட்டியிடுவதற்கும், வாக்களிக்கவும் தகுதியுடையவர் ஆவர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in