

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ஆக.5-ம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெறவுள்ளது. ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் நடைபெறும் இந்த நிகழ்வையொட்டி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தமிழ்நாடு,கேரளம், புதுச்சேரி மாநிலங்களின் அமைப்புச் செயலாளர் நாகராஜன், மாநில அமைப்புச் செயலாளர் சேதுராமன், பஜ்ரங்தள் மாநில அமைப்பாளர் பரத், ஆர்எஸ்எஸ் திருச்சி கோட்டத் தலைவர் செல்லத்துரை, திருவெறும்பூர் பகுதி தலைவர் வேல்முருகன் சம்பத் ஆகியோர் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் இருந்து சிறிதளவு மண் சேகரித்தனர். பின்னர், 2 ஆறுகளின் மண் மற்றும் ரங்கம் ரங்கநாதர் கோயில் பிரசாதம் ஆகியவற்றை அயோத்திக்கு பார்சலில் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சேதுராமன் கூறியது: ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவையொட்டி, காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் இருந்து சிறிதளவு மண் சேகரித்தோம். அத்துடன் ரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து வழங்கப்பட்ட பட்டு வஸ்திரம், மாலை, மஞ்சள் காப்பு ஆகிய பிரசாதங்களையும் அயோத்திக்கு பார்சலில் அனுப்பி வைத்துள்ளோம் என்றார்.