பாலம் கட்டுவதற்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
செய்யூர் அருகே பாலம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த ஒருவர் இறந்தார். இதனால் நேற்று வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். செய்யூர் வட்டத்தில் செங்காட்டூர் - அனுமந்தபுரம் சாலை அமைப்பதற்கான பணி கடந்த 6 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இந்தச் சாலைக்கு இடையில் 7 கான்கிரீட் பாலங்கள் உள்ளன. இவற்றில் 5 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டன. செங்காட்டூருக்கு உள்ளே 2 பாலங்கள் கட்டப்படாமல் உள்ளன.
இதில் ஒரு பழைய பாலத்தை சீரமைக்க கடந்த ஏப்ரல் மாதம் பள்ளம் தோண்டப்பட்டு, கிடப்பில் போடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் செங்காட்டூரைச் சேர்ந்த மூர்த்தி(30) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, அந்தப் பள்ளத்தில் நிலைகுலைந்து விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். அவருக்கு மனைவி மற்றும் ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளனர்.
இதனால் கோபமான பொதுமக்கள், உயிரிழந்த மூர்த்தி குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், தடுப்பு அமைக்காமல் பள்ளம் எடுத்த ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பவுஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, அந்தப் பகுதியில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த மதுராந்தகம் டிஎஸ்பி மகேந்திரன் மற்றும் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இதுகுறித்து உரிய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
