

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா நோயாளிகளை அழைத்துச் செல்ல அரசின் அனுமதி இருப்பதாகக்கூறி வாடகை கார்களை அடமானம் வைத்துவிட்டு கார் ஓட்டுநர் ஆந்திராவில் குடும்பத்துடன் தலை மறைவானது தெரியவந்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கஸ்பா பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் (30). கார் ஓட்டுநர். இவர், ஆற்காடு, ராணிப்பேட்டை, வேலூர் என பல்வேறு இடங்களில் வாடகைக்கு எடுக்கப்பட்ட 17 கார்களை அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்டதாக நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘கரோனா ஊரடங்கால் கார்ஓட்டுநராக இருந்த உதய குமாருக்கு கடுமையான பணத் தேவை இருந்தது. இதனால், வாடகை கார்களை கொடுக்கும் நபர்களை அணுகிய உதயகுமார், ‘கரோனா நோயாளிகளை வாகனங்களில் அழைத்துச் செல்ல அரசின் அனுமதி தன்னிடம் உள்ளது. உங்கள் காரை கொடுத்தால் தினமும் ரூ.1,500 வீதம் வாடகை தருகிறேன்’ என கூறியுள்ளார். இதனை நம்பிய பலர், உதயகுமாரிடம் வாடகைக்கு தங்களது கார்களை கொடுத் துள்ளனர்.
ஒரு சில நாட்களுக்கு மட்டுமே வாடகைப் பணத்தை உரிமை யாளர்களுக்கு கொடுத்த உதய குமார், அதன்பிறகு வாடகை பாக்கி வைத்துள்ளார். அதேநேரம், அந்த கார்களை பல்வேறு நபர்களிடம் அடமானம் வைத்து லட்சக்கணக் கில் பணம் பெற்றுள்ளார். மொத்தம் 17 கார்களை ரூ.14 லட்சத்து 70 ஆயிரத்துக்கு அடமானம் வைத்துள்ளார்.
இந்தப் பணத்தை திரும்ப கொடுக்க முடியாது என்பதால் கஸ்பாவில் உள்ள தனது வீட்டை ரூ.37 லட்சத்துக்கு விற்றவர், அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் ஆந்திர மாநிலத்தில் பதுங்கியுள்ளார்.
மேலும், வாடகை கார்களின் உரிமையாளர்களுக்கு அடமானம் வைத்த கார் களின் விவரத்தை செல்போனில் குறுஞ்செய்தியாக அனுப்பியுள் ளார். இந்த மோசடி தொடர்பான புகாரின்பேரில் தலைமறைவாக இருந்த உதயகுமார் கைது செய்யப்பட்டார்’’ என தெரிவித்தனர்.
எஸ்பி எச்சரிக்கை
இந்த மோசடி குறித்து ராணிப்பேட்டை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் மயில்வாகனன் கூறும்போது, ‘‘பண புழக்கம் குறைவு காரணமாக இதுபோன்று புதிய குற்றவாளிகள் உருவாகின் றனர். எனவே, முன்பின் தெரியாத நபர்களிடம் பொதுமக்கள் தங்க ளது வாகனங்களை அரசுக்கு வாடகைக்கு விட்டு பணம் தருவதாக ஆதாரங்கள் இல்லாமல் கூறினால் யாரையும் நம்ப வேண்டாம்’’ என தெரிவித்துள்ளார்.