Published : 01 Aug 2020 07:49 AM
Last Updated : 01 Aug 2020 07:49 AM

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி காலமானார்: மு.க.ஸ்டாலின், ராமதாஸ், கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் இரங்கல்

சென்னை

சாகித்ய அகாடமி விருது பெற்றஎழுத்தாளர் சா.கந்தசாமி நேற்றுகாலமானார். அவருக்கு வயது 80. அவரது மறைவுக்கு மு.க.ஸ்டாலின், ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சென்னை நந்தனத்தில் வசித்துவந்த சா.கந்தசாமி சமீபகாலமாக இதயநோய் பிரச்சினையால் அவதிப்பட்டுவந்தார். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 10 நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை 7.15 மணிக்கு காலமானார்.

கனிமொழி நேரில் அஞ்சலி

பின்னர், நந்தனம் இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவர் கனிமொழி, கவிஞர் இளையபாரதி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மாலை 5 மணி அளவில் பெசன்ட் நகர் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. காலமான சா.கந்தசாமிக்கு ரோஹிணி என்ற மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் 1940-ல் பிறந்த சா.கந்தசாமி, ‘சாயாவனம்’ என்ற நாவல் மூலமாக 1970-களில் தமிழ் இலக்கிய உலகில் அறிமுகமானார். தனது நண்பர்களுடன் இணைந்து‘கசடதபற’ என்ற இலக்கிய இதழைநடத்தினார். ஜெயகாந்தன், அசோகமித்திரன் உள்ளிட்ட எழுத்தாளர்கள் பற்றியும், தென்னிந்திய சுடுமண்சிலைகள் பற்றியும் பல்வேறு குறும்படங்களை இயக்கியுள்ளார்.

1998-ல் ‘விசாரணை கமிஷன்’ என்ற நாவலுக்காக இவருக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இவர் எழுதிய ‘நிகழ்காலத்திற்கு முன்பு’ என்ற நூலுக்கு 2006-ல் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்தது.

‘இன்னொரு மனிதன்’, ‘பெருமழை நாட்கள்’, ‘தொலைந்து போனவர்கள்’, ‘யாதும் ஊரே’ என்று பல்வேறு நாவல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய சிறுகதைகள் 10-க்கும் மேற்பட்டதொகுப்புகளாக வெளிவந்துள்ளன.

தமிழக அரசின் லலித்கலா அகாடமியின் முன்னேற்றத்தில் அவர் பெரும் பங்கு வகித்தார்.சாகித்ய அகாடமி ஆலோசனை குழு, இந்திய திரைப்படத் தணிக்கை குழு ஆகியவற்றில் பல ஆண்டுகள் உறுப்பினராக இருந்தவர்.

சா.கந்தசாமி மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், எழுத்தாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘‘சாயாவனம் என்ற புதினம் வாயிலாக தமிழ் இலக்கிய உலகில் சாகாவரம் பெற்ற படைப்பாளியான சா.கந்தசாமி மறைவுச் செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். இன்றையநிலையில் அவரது கருத்தும், படைப்பும் மிகவும் தேவைப்படும் சூழலில் அவர் நம்மைவிட்டு மறைந்துவிட்டார்’’ என்று தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,‘‘சா.கந்தசாமியின் ‘பப்பாளி மரம்’, ‘குறுக்கீடு’, ‘எட்டாம் கடல்’ உள்ளிட்ட பல சிறுகதைகள் எதார்த்தத்தை வெளிப்படுத்துபவை. 50 ஆண்டுகளுக்கு முன்பே‘சாயாவனம்’ புதினம் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியவர். அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு பெரும் இழப்பு’’ என்று தெரிவித்து உள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா உள்ளிட்டோர் சா.கந்தசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x