

கோவை மாநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவில் 150-க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் மக்களுடன் நெருங்கிய தொடர்பில் பணியாற்றி வருகின்றனர். தினசரி போக்குவரத்துக் காவல் நிலையங்களுக்கு சென்று ‘ரிப்போர்ட்’ செய்துவிட்டு, அன்றைய தினத்துக்கான பணியிட விவரங்களை பெற்று, அந்தந்த இடங்களுக்குச் சென்று பணியாற்றுகின்றனர்.
தற்போது கரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில், போக்குவரத்துக் காவலர்கள், காவல் நிலையங்களுக்கு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாநகர காவல்துறை துணை ஆணையர் (போக்குவரத்து) முத்தரசு கூறும்போது, ‘போக்குவரத்துக் காவலர்கள் தினசரி 7 - 11, 11 - 2, 2 - 6, 6 - 10 ஆகிய நேரக் கணக்கின் அடிப்படையில் சுழற்சி முறையில் பணியாற்றுகின்றனர். கரோனா தொற்று பரவலைத் தடுக்க, அவர்கள் காவல் நிலையங்களுக்கு வரத் தடை விதிக்கப்பட்டு, வாட்ஸ் அப் மூலம் பணியிடம் ஒதுக்கப்படுகிறது. தணிக்கையின் போது முகக்கவசம், கையுறை கட்டாயம் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருநாள் பயன்படுத்திய சீருடையை மறுநாள் பயன்படுத்தக் கூடாது, அந்த உடையை சுடுநீரில் ஊற வைத்து, துவைத்து அதற்கு அடுத்த நாள்தான் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சிக்னல்களை இயக்கும் காவலர்கள் பணிமுடிந்து செல்லும்போது, சிக்னல் பேனலை கிருமிநாசினியால் சுத்தப்படுத்தவும், ‘ஹைவேஸ் பேட்ரல்’ ரோந்து வாகனங்களை தினசரி சுத்தம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.