Published : 01 Aug 2020 07:16 AM
Last Updated : 01 Aug 2020 07:16 AM

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்: தியாகத் திருநாளாம் ‘பக்ரீத்’ பண்டிகையின் மகத்துவம்

‘பக்ரீத்’ எனும் தியாகத் திருநாள்பண்டிகை உலக அளவில்இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும்.

இறைவனின் தூதரான இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக இப்பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இறைவன், தன் தூதர் இப்ராகீமை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தினான். அவர் எல்லா சோதனைகளையும் சாதனைகளாக மாற்றிக்காட்டினார். இறை சோதனைகளில் உச்சகட்டமாக வந்தது, ‘தன் மகனை அறுத்து பலியிட வேண்டும்’ என வந்த இறைக்கட்டளை.

இறைக்கட்டளைக்காக மகனையே பலியிடத் துணிந்த இப்ராகீம் நபி, தியாகத்தின் சிகரமாகப் பார்க்கப்படுகிறார். அவரின் தியாகம் இறை சந்நிதானத்தில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அதனால்தான் அவரின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக ஆடு, மாடு, குர்பானி (இறைவனுக்காக பலியிட) முஸ்லிம்களின் மீது கடமையாக்கப்பட்டுள்ளது.

குர்பானி என்றால் என்ன?

நபித் தோழர்கள் முகம்மது நபியிடம் ‘‘இறைத்தூதரே! குர்பானி என்றால் என்ன? இந்த குர்பானியின் வரலாறு, தாத்பரியம் என்ன?’’ என்றுகேட்டார்கள். அதற்கு நபியவர்கள் “இது உங்களது தந்தை இப்ராகீம் நபியின் வழிமுறையாகும்.

உண்மையில் இந்நாள் மகிழ்ச்சிக்குரியதாகும். இறைவனிடமிருந்து நமக்கு வழங்கப்பட்ட ஒருமாபெரும் பாக்கியமாகும். நாம் இந்த சமயத்தில்தான் நமது குர்பானிஎனும் அன்பளிப்பை இறைவன்சந்நிதானத்தில் சமர்ப்பிக்கின்றோம். இந்தக் குர்பானி, நபி இப்ராகீம் அவர்களின் ஒரு மகத்தான தியாகத்தின் ஞாபகச் சின்னம் ஆகும்’’ என்றார்கள்.

நபி அவர்களிடம் “இறைத்தூதரே! குர்பானி கொடுப்பதால் எங்களுக்கு என்ன லாபம் கிடைக்கும்?’’ என நபித் தோழர்கள் கேட்க,அதற்கு நபியவர்கள். ‘‘அந்தப் பிராணியின் ஒவ்வொரு உரோமத்துக்குப் பகரமாகவும் ஒரு நன்மை கிடைக்கும்” என்றார்கள்.

நபித்தோழர் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் 10 ஆண்டுகள் வசித்தார்கள். அவற்றில் விடாமல் குர்பானி கொடுத்து வந்தார்கள். (திர்மதி)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “குர்பானி பிராணி மறுமை நாளில் எழுபது மடங்கு பெருத்ததாக வரும். மேலும் நன்மைகள் நிறுக்கப்படும் தராசுத் தட்டில் அது வைக்கப்படும்.” (பைஹகீ)

இறைவன் தனது புனித குர்ஆனில் கூறியுள்ளான்: ‘‘குர்பானிகொடுப்பதால், அதன் இறைச்சியோ, அதன் ரத்தமோ என்னைவந்தடையாது. மாறாக உங்களுடைய இறையச்சம்தான் என்னிடம் வரும்’’ என்கிறான். ஆகவே, குர்பானி கொடுப்பதன் நோக்கம் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெறுவதாகவும், அவனை மகிழச் செய்வதுமாகவே இருக்க வேண்டும்.

உதாரணமாக, நாம் குர்பானிக்காக விலை உயர்ந்த நன்கு கொழுத்த பிராணிகளை வாங்கி, அதைக்கொண்டு பெருமையோ, கர்வமோ கொள்ள நினைத்தால், நன்கு நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்... இப்படிப்பட்ட குர்பானிக்கு எவ்விதப் பயனும் கிடைக்காது. ஆக, இந்த தியாகத் திருநாள்நமக்கு கற்றுத்தரும் பாடம் என்னவெனில்,

‘‘இறைத்தூதர் இப்ராகீம் நபி இறைவனுக்காக மனைவி, பிள்ளைகள், சொத்து, சுகம் எல்லாவற்றையும் தியாகம் செய்ய முன்வந்தது போல், நாமும் அதுபோன்ற தியாகத்துக்கு முன்வர வேண்டும். நமக்கான இந்த வாழ்க்கை இறைவன் கொடுத்தது. அவனுக்காக இழக்க நாம் தயங்கலாமா?’’ என இந்த நாள் நம்மை பார்த்து கேட்கிறது.

அதுபோல் குர்பானி இறைச்சியை மூன்று பங்காக்கி சொந்தபந்தங்கள், ஏழை, எளிய மக்களுக்கு கொடுத்து இன்புற, நபிகள் நாயகம் வலியுறுத்துகிறார்கள்.

‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்’ என்ற தத்துவத்தைக் கொண்டாடவே இப் பண்டிகை நம்மை அழைக்கின்றது.

மீ.கா.முஹம்மது ரஃபீக்மிஸ்பாஹி

இமாம்.

டவுன் ஹால் ரோடு பள்ளிவாசல், மதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x