

கற்பனை வளமும், படைப்பாற்றலும் கொண்டவர்கள் சிவில் இன்ஜினீயரிங், ஆர்க்கிடெக்சர் ஆகிய துறைகளில் சாதிக்கலாம் என்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், அமிர்தா விஷ்வ வித்யாபீடம் இணைந்து நடத்திய ‘உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டி நிகழ்ச்சியில் வல்லுநர்கள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், அமிர்தாவிஷ்வ வித்யாபீடம் உடன் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற வழிகாட்டி நிகழ்ச்சியைகடந்த ஜூலை 24-ம் தேதி முதல் ஆன்லைனில்நடத்தி வருகிறது. கடந்த 30-ம் தேதி நடந்தநிகழ்ச்சியில் சிவில் இன்ஜினீயரிங், ஆர்க்கிடெக்சர் படிப்புகள் குறித்து துறை வல்லுநர்கள் உரையாற்றினர். அவர்கள் கூறியதாவது:
கோவை கேபிஆர் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினீயரிங் அண்ட் டெக்னாலஜியின் சிவில் இன்ஜினீயரிங் துறை தலைவர் டாக்டர் ஜி.அனுஷா: பொறியியலின் தாய்த் துறையாக விளங்குவது சிவில் இன்ஜினீயரிங். இதை வெறும் கட்டுமானத் துறை என்ற வட்டத்துக்குள் சுருக்கிவிட முடியாது. இது நெடுஞ்சாலை, ரயில்வே, துறைமுகம், பாலம், அணைகள் என அனைத்துவிதமான உள்கட்டமைப்பு பணிகள் சம்பந்தப்பட்டது. இத்துறையில் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, சுயதொழில் அனைத்துக்கும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அரசுத் துறை, பொதுத் துறை, தனியார் என அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன.
மேற்படிப்பை பொருத்தவரை, எம்.இ., எம்.டெக்., எம்.எஸ்., எம்பிஏ படிக்கலாம். மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு போட்டித் தேர்வுகள், தகுதித் தேர்வுகள் மூலம் பல்வேறு அரசுப் பணிகள், கல்லூரி பேராசிரியர் பணி, ராணுவம், கடற்படை போன்றவற்றில் உயர் பொறுப்புக்கு செல்லலாம். இஸ்ரோ, டிஆர்டிஓ, சிஎஸ்ஐஆர் போன்ற ஆராய்ச்சி நிறுவனங்களில் விஞ்ஞானியாக பணியில் சேரலாம். சிவில் இன்ஜினீயர்களுக்கு சாஃப்ட்வேர் துறையிலும் வேலைவாய்ப்புகள் உள்ளன. ஐபிபிஐ (The Insolvency and Bankruptcy Board of India - IBBI) தேர்வு எழுதி பொதுத்துறை, தனியார் வங்கிகளுக்கு, அனுமதி பெற்ற மதிப்பீட்டாளராகவும் (Approved Valuer) பணியாற்றலாம்.
அமிர்தா விஷ்வ வித்யாபீடத்தின் அமிர்தா ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங்கின் சிவில் இன்ஜினீயரிங் துறை உதவி பேராசிரியர் டாக்டர் எம்.கே.ஹரிதரன்: கட்டிடக் கலை பட்டப் படிப்பில் (பி.ஆர்க்.) சேர, பிளஸ் 2-வில் கணிதம், இயற்பியல், வேதியியல் படித்திருக்க வேண்டும். தேசிய ஆர்க்கிடெக்சர் கவுன்சில் அமைப்பு நடத்தும் ‘நாட்டா’ திறனறி தேர்வில் (National Aptitude Test in Architecture - NATA) தேர்ச்சி பெற வேண்டும்.
ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் பி.ஆர்க். படிக்க, ஜேஇஇ நுழைவுத் தேர்வில் தகுதிபெற வேண்டும். பி.ஆர்க். 5 ஆண்டுகால தொழில்படிப்பு. இதை முடித்த பிறகு, தேசிய ஆர்க்கிடெக்சர் கவுன்சிலில் பதிவுசெய்வது அவசியம். மேற்படிப்பு செல்ல விரும்புவோர் எம்.ஆர்க்.கில் டிஜிட்டல் ஆர்க்கிடெக்சர், அர்பன் டிசைனிங், பில்டிங் இன்ஜினீயரிங் அண்ட் மேனேஜ்மென்ட் போன்ற சிறப்பு படிப்புகளில் சேரலாம். ஆர்க்கிடெக்சர் பட்டதாரிகளுக்கு பில்டிங் டிசைனிங், டவுன் பிளானிங், ஆசிரியர் பணி என வெவ்வேறு தளங்களில் வேலைவாய்ப்புகள் உள்ளன.
சிவில் இன்ஜினீயரிங் படித்தவர்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் உள்ளன. அவர்கள் சர்வே, லெவலிங், கட்டுமானப் பொறியியல், சுற்றுச்சூழல் பொறியியல், நீர்ஆதார பொறியியல் போன்ற பாடப் பிரிவுகளில் எம்.இ., எம்.டெக். படிக்கலாம்.
ஆர்க்கிடெக்சரல் ஆலோசகர் ஏஆர்.ஜெ.சுப்ரமணியன்: கட்டிடக் கலை என்பது வெறும் அழகியல் சார்ந்தது மட்டுமல்ல. பயன்பாட்டுக்கு உகந்த அழகியல் தொடர்பானது கட்டிடக் கலை. அதைப் பார்த்து ரசிப்பதுடன், பயன்படுத்தவும் முடியும். நல்ல கற்பனைத் திறன் கொண்டவர்களுக்கு இது அருமையான படிப்பு. சிட்டி பிளானிங், உள்கட்டமைப்புத் திட்டம், போக்குவரத்துப் பொறியியல் போன்றவற்றில் இத்துறையினருக்கு வேலைவாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. ஆர்க்கிடெக்சர்கள் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட வேண்டும். அவர்கள் விளையாட்டு மைதானம், பாலம், மருத்துவமனை, கல்வி வளாகம் என ஏதேனும் ஒரு பிரிவில் நிபுணத்துவம் மிக்கவர்களாக இருக்க வேண்டும். பி.ஆர்க். பட்டம் நுழைவுச் சீட்டு போன்றது. தொழிலில் இறங்கி நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு கட்டுமான பணியிலும் புதுப்புது அனுபவம் கிடைக்கும்.
மேக்கன்ஸ் ஊட்டி ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சர் தலைவர் என்.முரளிகுமாரன்: வழக்கமாக ஐஐடி மாணவர் சேர்க்கைக்கு ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்ச்சியுடன், பிளஸ் 2 கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இந்த ஆண்டு மதிப்பெண் தகுதி 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, பி.ஆர்க். படிப்புக்கு இந்த ஆண்டு பிளஸ் 2-வில் மேற்குறிப்பிட்ட பாடங்களில் தேர்ச்சி பெற்றால் போதும் என்று தேசிய ஆர்க்கிடெக்சர் கவுன்சில் முடிவெடுத்துள்ளது. தவிர, ‘நாட்டா’ நுழைவுத் தேர்வில் கலந்துகொள்வோர் அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இத்தேர்வு ஆகஸ்ட் 28-ம் தேதி நடக்க உள்ளது. இத்தேர்வுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.
மருத்துவம், சட்டம், கணக்கு தணிக்கை (சி.ஏ), ஆர்க்கிடெக்சர் ஆகிய 4 தொழில்படிப்புகளும் ஒழுங்குமுறை படிப்புகளாக கருதப்படுகின்றன. இப்படிப்பை முடிப்பவர்கள் அதற்கான கவுன்சிலில் பதிவுசெய்துவிட்டுதான் தொழிலை மேற்கொள்ள முடியும். கட்டுமானத் துறையில் ஆர்க்கிடெக்சர்களின் பங்கு முக்கியமானது. படைப்பாற்றல், கற்பனை வளம் உடையவர்களுக்கு இது அற்புதமான படிப்பு.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பின்னர், மாணவர்கள், பெற்றோர் எழுப்பிய கேள்விகள், சந்தேகங்களுக்கு துறை வல்லுநர்கள் விரிவாக விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் முதுநிலை துணை ஆசிரியர் ம.சுசித்ரா நெறிப்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியை இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ், கேபிஆர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் இணைந்து நடத்தின. இதில் பங்கேற்க தவறியவர்கள் https://bit.ly/2P7JHRI என்ற லிங்க் மூலம் முழு நிகழ்வையும் பார்க்கலாம்.
| கடல்சார் பொறியியல் நிபுணர்கள் இன்று உரை ‘உயர்வுக்கு உயர்கல்வி’ நிகழ்ச்சி தினமும் மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. இன்று (ஆகஸ்ட் 1) மாலை நடக்கும் நிகழ்வில் அமெட் (AMET) பல்கலைக்கழக நாட்டிக்கல் சயின்ஸ் துறையின் டீன் மற்றும் தலைவர் கேப்டன் கே.கார்த்திக், சென்னை வி.ஷிப்ஸ் ஷிப் மேனேஜ்மென்ட் நிறுவன நிர்வாக இயக்குநர் மணிகண்டன், கல்வி ஆலோசகர் டாக்டர் கே.மாறன் ஆகியோர் பங்கேற்று கடல்சார் பொறியியல் (மரைன் இன்ஜினீயரிங்), கடல்சார் தொழில்நுட்பம் (ஓஷன் டெக்னாலஜி) ஆகிய படிப்புகள் பற்றிய பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்துகொள்கின்றனர். இந்நிகழ்வை இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் இணைந்து நடத்துகிறது. இதில் பங்கேற்க கட்டணம் எதுவும் இல்லை. மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்துகொண்டு பயன்பெறலாம். பங்கேற்க விரும்புபவர்கள் http://connect.hindutamil.in/uuk.php என்ற இணையதளத்தில் பதிவுசெய்து கொள்ளவும். |