சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா நடத்தக்கோரிய மனு தள்ளுபடி

சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா நடத்தக்கோரிய மனு தள்ளுபடி
Updated on
1 min read

சங்கர்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா நடத்த உத்தரவிடக்கோரி தாக்கலான மனுவை உயர் நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது.

சங்கரன்கோவிலைச் சேர்ந்த முத்துவைரம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் அன்னை கோமதி அம்மன் ஆடித்தபசு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கரோனா ஊரடங்கு காரணமாக தற்போது கோயிலுக்குள் பக்தர்களை அனுமதிப்பதில்லை. ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முக்கிய கோயில்களில் காலம் காலமாக நடைபெறும் விழாக்களை அந்தந்த கோயில்களின் பழக்க, வழக்கப்படி கோயிலுக்கு உள்ளேயே நடத்திக் கொள்ளலாம் என அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால் ஆக. 2-ல் நடைபெற வேண்டிய ஆடித்தபசு திருவிழாவை ரத்து செய்யப்படுவதாகவும், அம்பாள் தபசுவிற்கு பதில், அபிஷேகம் மற்றும் அலங்காரம் மட்டும் செய்யப்படும் என்றும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது ஆகம விதிக்கு எதிரானது. மேலும் கோயில் விழா தொடர்பாக அறநிலையத்துறை பிறப்பித்துள்ள அறிவுறுத்தலுக்கும் எதிரானதாகும். எனவே, அறநிலையத்துறை அறிவுறுத்தல்படி, ஆடித்தபசு திருவிழாவை வழக்கம்போல எவ்வித குறைபாடில்லாமல் நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர், ஆடித்தபசு திருவிழா கோயிலுக்குள் நடத்தப்படும். கரோனா ஊரடங்கு காரணமாக முன்பு நடைபெற்று வந்தது போல் தபசு திருவிழாவை நடத்த முடியாது என்றார். இதை பதிவு செய்து கொண்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in