Last Updated : 31 Jul, 2020 05:39 PM

 

Published : 31 Jul 2020 05:39 PM
Last Updated : 31 Jul 2020 05:39 PM

தமிழகத்தில் முதல்முறையாக காணொலி காட்சி மூலம் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்த நெல்லையில் ஏற்பாடு: கைபேசி மூலம் குறைகளை ஆட்சியரிடம் நேரில் தெரிவிக்கலாம்

திருநெல்வேலி

தமிழகத்தில் முதல்முறையாக திருநெல்வேலி மாவட்டத்தில் காணொலி காட்சி மூலம் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கூறியதாவது:

ஒவ்வொரு திங்கள்கிழமையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றுவந்த மக்கள் குறைதீர் கூட்டம் கரோனா நோய் தடுப்பு பணிகளை முன்னிட்டு தொடர்ந்து நடத்த இயலாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தை வரும் 3-ம் தேதி முதல் தேசிய தகவலியல் மையத்தின் (NIC) தொழில்நுட்ப உதவியுடன் காணொலி காட்சி வாயிலாக நடத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மனுக்களை இணையதளத்தில் பதிவு செய்ய:

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் https://tirunelveli.nic.in என்ற இணையதளத்தின் முதல் பக்கத்தில் District Collector’s puplic Grievance Meeting through Video Conference (மாவட்ட ஆட்சியரின் காணொலி காட்சி வாயிலான மக்கள் குறைதீர் கூட்டம்) என்பதை தெரிவு செய்து, Petition Register- கோரிக்கைப்பதிவு என்பதில் தங்களது கோரிக்கை தொடர்பான விபரங்களை அனைத்து நாட்களிலும் எந்த நேரத்திலும் பதிவு செய்யலாம்.

காணொலி காட்சி வாயிலான மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொள்ள:

ஒவ்வொரு திங்கள்கிழமையன்றும் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணிவரை காணொலி காட்சி வாயிலாக நடைபெறவுள்ள மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து துறைசார் அலுவலர்களும் தங்கள் அலுவலகத்தில் இருந்தபடியே பங்கேற்பார்கள்.

இந்த காணொலி காட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் பொதுமக்கள் தங்கள் கைபேசியில் https://tirunelveli.nic.inஎன்ற இணையதளத்துக்குள் சென்று காணொலி காட்சி வாயிலான மக்கள் குறைதீர் கூட்டம் (GDP meeting with District Collector through Video Conference) என்பதை தேர்வு செய்ய வேண்டும். பின்பு தங்கள் பெயர் மற்றும் ஊர் ஆகியவற்றை பதிவு செய்து காணொலி காட்சிக்குள் நுழைந்து, தங்கள் பெயர் குறிப்பிட்டு அழைக்கப்படும் வரை காத்திருக்க வேண்டும்.

பெயர் அழைக்கப்படும்போது தங்களது கைப்பேசியின் வழியாகவே மாவட்ட ஆட்சியருடன் காணொலி காட்சியில் நேரடியாக தங்களுடைய கோரிக்கை தொடர்பான விபரங்களை சுருக்கமாக தெரியப்படுத்தலாம். இதையடுத்து தங்களுடைய கோரிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் காணொலி காட்சி வாயிலாகவே விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு திங்கள்கிழமையும் காணொலி காட்சி வாயிலாக நடைபெறவுள்ள மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x