

முதல்வர் நிவாரண நிதிக்கு வந்த தொகை விவரத்தை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று புதுச்சேரி அரசை பாஜக வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் இன்று (ஜூலை 31) வெளியிட்ட அறிக்கை:
"புதுச்சேரியில் கரோனாவால் பாதிப்புக்கு உள்ளானவர்களை மருத்துவமனையில் அனுமதித்த பிறகு, அந்த வீட்டில் உள்ளவர்களைத் தனிமைப்படுத்துகின்றனர். இதைச் செய்யும் முறையால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்குப் பெரும் மனவேதனை ஏற்படுகிறது. அவர்களுக்கு அரசு வழங்கும் நிவாரணப் பொருள்கள் போதுமானதாக இல்லை என்றும் புகார் வருகிறது.
வருவாய்த்துறை மூலம் ஒரு வீட்டுக்குத் தடுப்பு வேலி அமைக்க ரூ.5,000 வரை செலவு செய்யும் அரசு, அதற்கு மாறாக அந்த வீட்டில் சிவப்பு நிற பெரிய போஸ்டரை ஒட்டி இந்தப் பணத்தை அவர்களுடைய நிவாரணச் செலவுக்குப் பயன்படுத்தத் தரலாம்.
தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் குறிப்பிட்ட நாட்களுக்குப் பின் 'நெகட்டிவ்' என்று முடிவு வந்தவுடன் அந்தத் தடுப்பு வேலியை பிரிக்காமல் பல வீடுகளில் 15 நாள் வரை காலத்தை நீட்டுவது தவறானது.
மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ சாதனங்கள் ஏதுமில்லாமல் ஆயிரம் படுக்கை வசதிகளைத் தயார் செய்துள்ளதாக முதல்வர் கூறுவது வெற்று அறிக்கைதான். முதலில் தற்காலிகமாக கூடுதல் மருத்துவர்களையும், செவிலியர்களையும் நியமிக்க வேண்டும்.
முதல்வர் நிவாரண நிதிக்கு வந்த தொகை விவரத்தை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். அதில் எந்தெந்தத் துறைக்குப் பணம் செலவிடப்பட்டது என்ற விவரத்தைக் குறிப்பிட வேண்டும்".
இவ்வாறு சாமிநாதன் தெரிவித்துள்ளார்.