

ஜெயலலிதா வழியில் முதல்வர் பழனிசாமி கூட்டுறவு வங்கிகளைச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு வங்கிகளை முடக்கும் மத்திய அரசையும், அதற்குத் துணைபோகும் மாநில அரசையும் கண்டிப்பதாகக் கூறி, தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம், உள்ளிட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
திருவாரூரில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிக் கிளை முன்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''மத்திய அரசு கூட்டுறவு வங்கிகளை முடக்கும் நடவடிக்கைக்குத் தமிழக அரசு துணை போவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழக கூட்டுறவுத் துறை பதிவாளர் கடந்த 27-ம் தேதி தொடக்க வேளாண் வங்கிகளுக்குக் கடன் வழங்கும் அதிகாரத்தை ரத்து செய்தும், மத்திய கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு கணக்கு (மிரர் அக்கவுண்ட்) தொடங்கி கடன் பெற்றுக் கொள்ளவும் உத்தரவிட்ட பின் பணி மாறுதலில் சென்றுள்ளார். அவர் போட்ட உத்தரவால் குறுவை சாகுபடிக்கான காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடியும் நிலையில், பிரீமியம் செலுத்த முடியாமல் விவசாயிகள் பரிதவிக்கிறார்கள்.
இதுவரையில் எந்தவொரு விவசாயிக்கும் கடன் கொடுக்கவும் முன்வராமல் தொடக்கக் கூட்டுறவு வங்கிகள் முடக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கடந்த 2013-ல் மத்திய அரசு இதேபோல் கூட்டுறவு வங்கிகளைக் கையகப்படுத்த சட்டம் கொண்டு வந்தபோது அன்றைய முதல்வர் ஜெயலலிதா கூட்டுறவு வங்கிகள் தமிழகத்தில் செயல்படுவதை மத்திய அரசு சட்டம் போட்டுத் தடுக்க முடியாது எனச் சொன்னதுடன், அவை எப்போதும் போலவே தொடர்ந்து செயல்படும் எனக் கொள்கை முடிவு எடுத்து செயல்படுத்திக் காட்டினார்.
அவர் வழியைப் பின்பற்றி ஆட்சி நடத்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசின் நடவடிக்கையைத் தடுக்க அச்சப்படுவது ஜெயலலிதாவுக்குச் செய்யும் துரோகம் என்பதை உணர வேண்டும். எனவே, உடனடியாக நிபந்தனையின்றித் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் மூலம் வேளாண் கடன் வழங்க முன் வரவேண்டும். 2019-20 ஆம் ஆண்டுக்கான சம்பா காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை உடன் பெற்றுத் தர வேண்டும்.
காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் தலைமையிலான குழு கர்நாடக, தமிழக அணைகளை நேரில் பார்வையிட்டு, கருகும் குறுவைப் பயிரைக் காப்பாற்றவும், சம்பா சாகுபடியைத் தொடங்கிடவும் கர்நாடகாவிடமிருந்து தமிழகத்திற்கு உரிய தண்ணீரைப் பெற முதல்வர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்''.
இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ஜி.வரதராஜன், மாநிலத் துணைச் செயலாளர் எம்.செந்தில்குமார், மாவட்டத் தலைவர் எம்.சுப்பையன், மாவட்டப் பொருளாளர் நடராஜன், மாவட்டத் துணைத் தலைவர் எம்.கோவிந்தராஜ், திருவாரூர் ஒன்றியச் செயலாளர் அகஸ்டின் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.