

மின் விசிறிகள் இல்லாத காலத்தில் வெக்கையின் தாக்கத்தில் இருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள பனை ஓலை விசிறிகளையே மக்கள் அதிகம் பயன்படுத்தியதால், பெரும்பாலான கடைகள், திருவிழாக்கள் மற்றும் ஊருக்குள் கொண்டு வந்தும் விசிறிகள் விற்பனை செய்யப்பட்டன.
நாளடைவில், மின்விசிறிகள் அதிகரித்ததால் பனை ஓலை விசிறிகள் வழக்கொழிந்தன. பனை ஓலை விசிறிகள் பயன்பாடு குறைந்ததால் அந்த தொழிலில் ஈடுபட்டு வந்தோர் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், கரோனா பரவலைத் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில், மக்கள் பெரும்பாலும் அவரவர் வீடுகளிலேயே இருப்பதால் மீண்டும் பனை ஓலை விசிறிகளை வாங்கத் தொடங்கி உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த விசிறிகளை வாங்கிப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக விசிறி விற்பனையாளர் கூறுகிறார்.
இது குறித்து பனை ஓலை விசிறி விற்பனையாளர் நெடுவாசலைச் சேர்ந்த மாசிலாமணி (55) கூறுகையில், "கடந்த 40 ஆண்டுகளாக பனை ஓலை மற்றும் கோரைப் பாய் வியாபாரம் செய்து வருகிறேன். தொடக்கத்தில் விசிறிக்குதான் கடும் கிராக்கி இருந்தது. இதன் பிறகு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை விற்பனைக்குக் கொண்டு செல்லும் ஓலை விசிறிகளை அதிசயப் பொருளாகவே மக்கள் பார்த்து வந்தனர்.
இந்நிலையில், தற்போது ஊரடங்கினால் தினமும் 50-க்கும் மேற்பட்ட விசிறிகள் விற்பனையாகின்றன. சைக்கிளில் விற்பனைக்காகக் கொண்டு செல்லும்போது பொதுமக்களே சைக்கிளை நிறுத்தச் செய்து ஆர்வத்தோடு வாங்கிச் செல்கின்றனர்.
ஒரு விசிறி ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விசிறிகள் கிடைக்காததால் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து விலைக்கு வாங்கி விற்பனை செய்து வருகிறேன்.
உயர்ந்துள்ள மின் கட்டணத்தைக் குறைத்துக்கொள்ளவும், ஊரடங்கில் வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் தாங்கள் தனித்திருந்து விசிறிக்கொள்ளவும் இந்த பனை ஓலை விசிறிகளை வாங்குகிறோம் என மக்கள் கூறுகின்றனர்.
மேலும், ஒரே இடத்தில் அதிகமான வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் கடைகளிலும் தனித்திருந்து விசிறிக்கொள்வதற்காக பனை ஓலை விசிறிகளை வாங்கிப் பயன்படுத்தப்படுகின்றனர்" என்றார்.