

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆக.5-ல் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பங்கேற்பதாக அறிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் காணொலி வாயிலாக நடத்தப்பட்டது. மாநில தலைவர் மூ.மணிமேகலை தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ச.மயில் பேசினார்.
இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் ச.மோசஸ், துணை பொதுச்செயலாளர் தா.கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கடந்த 2019 ஜனவரியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற 6500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது தமிழக அரசு மேற்கொண்ட குற்றவியல் நடவடிக்கைகள் மற்றும் தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதி 17(ஆ) நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் மா.ரவிச்சந்திரன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநிலப் பொதுச்செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் ஆகியோர் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.
கரோனா நோய் தொற்றின் தாக்கம் தணிந்தவுடன் மாணவர்களின் நலன் கருதி சுழற்சி முறையில் பள்ளிகளை திறக்க வேண்டும் என 3 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஆக.5-ல் தமிழகம் முழுவதும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உறுப்பினர்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களின் ஆண்டு ஊதிய உயர்வில் தேக்கம் ஏற்படாதவாறு ஊதிய அட்டவணையில் தகுந்த மாற்றங்கள் செய்து ஆண்டு ஊதிய உயர்வு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
முன் அனுமதியின்றி உயர்கல்வி பயின்றி ஆசிரியர்கள் மீது தொடக்க கல்வித்துறை ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக வரும் செய்திகள் ஆசிரியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை கைவிட்டு 6 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள உயர்கல்வி பின்னேற்பு அனுமதியை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.