Published : 31 Jul 2020 03:40 PM
Last Updated : 31 Jul 2020 03:40 PM

சீன விளையாட்டுகளுக்கு இடமுண்டு; சிலம்பத்துக்கு இடமில்லை: விளையாட்டுக் கோட்டா நியமனங்களில் நிராகரிப்பு

தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலைகளில் முக்கியமானது சிலம்பம். இதை உணர்ந்து 2008-ம் ஆண்டு முதல், சிலம்பத்தை முறையாக அங்கீகரித்த தமிழக அரசு, உயர் கல்வி சேர்க்கையில் விளையாட்டுத் துறைக்கான சிறப்பு ஒதுக்கீடு பெறும் விளையாட்டுகள் பட்டியலில் சிலம்பத்தையும் சேர்த்தது. ஆனால், போலீஸ் உள்ளிட்ட சீருடைப் பணியாளர் நியமனங்களிலும் பிற அரசுத் துறைகளுக்கான பணி நியமனங்களிலும், சிலம்பம் படித்தவர்களுக்கு விளையாட்டு கோட்டாவில் பணி நியமனம் பெற வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

ஆண்டுதோறும், விளையாட்டு கோட்டாவில் பொறியியல் கல்லூரிகளில் மட்டும் தமிழகத்தில் சுமார் 400 மாணவர்கள் சிறப்பு அட்மிஷன் பெறுகிறார்கள். இவர்களில் சுமார் 15 பேர் வரை சிலம்பம் படித்த மாணவர்களும் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு கால்நடை மருத்துவப் படிப்பில்கூட ஒரு இடம் சிலம்பம் படித்த மாணவருக்கு விளையாட்டு கோட்டாவில் கிடைத்தது. இது தவிர, ஆண்டுதோறும் சிலம்பம் படித்த மாணவர்கள் 100 பேருக்கு உயர் கல்வி கற்க தலா 7 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்குகிறது தமிழக அரசு.

சிலம்பம் படித்த மாணவர்களுக்கு உயர் கல்வி பயில ஓரளவுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் அரசுப் பணியில் சேர்வதற்கு இவர்களுக்கு விளையாட்டு கோட்டாவில் முன்னுரிமை இல்லை. காவல் துறை, தீயணைப்புத் துறை, சிறைத்துறை ஆகிய சீருடைப் பணியாளர் நியமனங்களில் சார்பு ஆய்வாளர் பணியிடம் வரை தற்போது விளையாட்டு கோட்டாவுக்கு 5 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. ஆனால், இந்த ஒதுக்கீட்டில் சிலம்பம் படித்த மாணவர்கள் வரமுடியாது.

கொரியா நாட்டின் விளையாட்டான ஸ்குவாஷ், சீனாவின் விளையாட்டுக்களான டேக்வாண்டோ, ஊஸூ உள்ளிட்ட விளையாட்டுகளைக் கற்றவர்களுக்கு எல்லாம் தமிழகத்தில் சீருடைப் பணியாளர் நியமனம் மற்றும் அரசு ஊழியர் பணி நியமனங்களில் விளையாட்டுக் கோட்டாவில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆனால் தமிழர் கலையான சிலம்பம், விளையாட்டுக் கோட்டா பட்டியலில் இன்னமும் சேர்க்கப்படவில்லை.

இதற்கான காரணத்தை நமக்கு விளக்கிய தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகச் செயலாளர் வழக்கறிஞர் கே.ஜி. முரளி கிருஷ்ணா, “சிலம்பம் தமிழர்களின் பாரம்பரியக் கலையாக இருந்தாலும் இந்தியாவில் ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், ஒடிசா, மேற்கு வங்கம், டெல்லி, ஹரியாணா, தெலங்கானா, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலும் சிலம்பக் கலை உயிர்ப்புடன் இருக்கிறது.

சீருடைப் பணியாளர் நியமனங்களில் முன்பு விளையாட்டுக் கோட்டாவுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு இருந்தது. ஆனால், விளையாட்டுக் கோட்டாவில் பணியில் சேர தகுதியான நபர்கள் வருவதில்லை என்று சொல்லி இதை 5 சதவீதமாகக் குறைத்தார்கள். இந்த 5 சதவீதத்திலும் தமிழ் மண்ணுக்குச் சம்பந்தமில்லாத அந்நிய விளையாட்டுக்களுக்கு எல்லாம் இடமளிக்கப்படுகிறது. குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல் விளையாட்டுகள் எல்லாம் வசதிபடைத்தவர்களின் விளையாட்டு.

அந்த விளையாட்டுகளைக் கற்றவர்கள் போலீஸ் கான்ஸ்டபிள் வேலைக்கு வரப்போவதில்லை. ஆனால், நமது பாரம்பரியக் கலையான சிலம்பத்தைப் படித்துவிட்டு ஆயிரக்கணக்கான பிள்ளைகள் அரசு வேலைக்குத் தவமிருக்கிறார்கள். யதார்த்தம் இப்படியிருக்க, ஒவ்வொரு முறையும் சீருடைப் பணியாளர் தேர்வுகள் நடக்கும் போது, விளையாட்டுக் கோட்டாவில் தகுதியான நபர்கள் வரவில்லை என்று சொல்லி அந்த 5 சதவீதத்திலும் பெரும்பாலான இடங்களில் பொதுப் பிரிவில் விண்ணப்பித்தவர்களைப் பணியமர்த்துவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

இதை எதிர்த்து, எஸ்.கார்த்திகாயினி என்ற சிலம்ப மாணவி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த நவம்பர் மாதம் வழக்குத் தொடர்ந்தார். வழக்கின் விசாரணையின் போது, ‘தமிழகத்துக்குச் சம்பந்தமில்லாத விளையாட்டுகளை எல்லாம் விளையாட்டுக் கோட்டாவுக்கான பட்டியலில் வைத்திருக்கிறீர்கள்; சிலம்பத்துக்கு அதில் இடமில்லையா?’ என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அதற்கு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் தரப்பில் பதிலளித்தவர்கள், ‘அகில இந்திய போலீஸ் கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல் படிதான் விளையாட்டுக் கோட்டாவுக்கான விளையாட்டுக்களை பட்டியலில் சேர்க்க முடியும்’ என்று சொன்னார்கள். அதற்கு, ‘அப்படியானால் இதுகுறித்து அகில இந்திய போலீஸ் கட்டுப்பாட்டு வாரியத்துக்குக் கடிதம் எழுதுங்கள்’ என்று தெரிவித்தார் நீதிபதி.

இதையடுத்து கடந்த மார்ச் மாதமே அகில இந்திய போலீஸ் கட்டுப்பாட்டு வாரியம், மத்திய, மாநில உள்துறைச் செயலாளர்கள் உள்ளிட்ட இடங்களுக்கு நாங்கள் கடிதம் எழுதிவிட்டோம். அதற்குள்ளாகக் கரோனா பொதுமுடக்கம் வந்துவிட்டதால் அதற்கு மேல் நீதிமன்ற நடவடிக்கைகளை எங்களால் தொடர முடியவில்லை. பொதுமுடக்கம் முடிவுக்கு வந்ததும் மீண்டும் இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லவிருக்கிறோம்” என்றார்.

இது ஒருபுறமிருக்க, பிற அரசுப் பணி நியமனங்களில் இருந்த விளையாட்டுக் கோட்டா நியமனங்கள் இருபது வருடங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். இந்த நிலையில், கடந்த ஆண்டு அரசுப் பணி நியமனங்களில் விளையாட்டு வீரர்களுக்கு 2 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்காக அவருக்கு சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்கள் சார்பில் பாராட்டு விழா எடுக்கப்பட்டது. அந்த விழாவில் பேசிய முதல்வர், விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டை மேலும் ஒரு சதவீதம் உயர்த்தி அறிவித்தார். ஆனால், சிலம்பம் படித்த மாணவர்கள் இந்த வழியாகவும் அரசு வேலைக்குத் தகுதிபெற முடியாத நிலை உள்ளது.

இதுகுறித்தும் பேசிய முரளி கிருஷ்ணா, ”ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சிலம்பத்துக்குத் தனி அங்கீகாரம் அளிக்கப்பட்டது. 1995-ல், சென்னையில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் காட்சி விளையாட்டாகச் சிலம்பத்தைச் சேர்க்க வைத்ததே ஜெயலலிதாதான். அப்போது நம்மையும் சேர்த்து ஒன்பது நாடுகள் அந்தக் காட்சி விளையாட்டில் பங்கேற்றன. ஆனால், அடுத்தடுத்த விளையாட்டுப் போட்டிகளில் ஒன்பது நாடுகளைப் பங்குபெற வைக்க முடியவில்லை. அதனால், சிலம்பத்துக்கு உலக அளவிலான அங்கீகாரம் கிடைப்பதில் தடங்கல் ஏற்பட்டுவிட்டது.

தற்போதைய முதல்வர் பழனிசாமிக்காக நேரு ஸ்டேடியத்தில் எடுக்கப்பட்ட விழாவில் சுமார் ஏழாயிரம் விளையாட்டு வீரர்கள் திரண்டிருப்பார்கள். அவர்களில் ஆறாயிரம் பேர் சிலம்பம் படித்த மாணவர்கள். இது முதல்வருக்கும் தெரியும். ஆனால் விளையாட்டுக் கோட்டாவில், சிலம்பம் படித்த மாணவர்கள் அரசு வேலை வாய்ப்புப் பெறமுடியாது என்ற விவரம் முதல்வருக்குத் தெரியாது. எனவே, இந்த விஷயத்தையும் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் இருக்கிறோம்.

எங்களுடைய கோரிக்கை எல்லாம் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பத்துக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும்; அதன் மூலம் இன்னும் நிறையப் பிள்ளைகள் சிலம்பம் படிக்க முன்வர வேண்டும் என்பது தான்”என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x