Last Updated : 31 Jul, 2020 03:25 PM

 

Published : 31 Jul 2020 03:25 PM
Last Updated : 31 Jul 2020 03:25 PM

கல்வித்துறையில் சர்வாதிகாரப்போக்கை மத்திய அரசு கடைபிடிக்கிறது; முன்னாள் அமைச்சர் பொன்முடி கருத்து

முன்னாள் அமைச்சர் பொன்முடி ஜூம் செயலி மூலம் பத்திரிகையாளர்களிடம் பேசுகிறார்.

விழுப்புரம்

புதிய கல்விக்கொள்கை மூலம் கல்வித்துறையில் சர்வாதிகாரப்போக்கை மத்திய அரசு கடைபிடிக்கிறது என்று தமிழக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக்கொள்கை, ஆன்லைன் வகுப்புகள் குறித்து தமிழக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எம்எல்ஏ இன்று (ஜூலை 31) ஜூம் செயலி மூலம் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:

"புதிய கல்விக் கொள்கை மூலம் மத்திய அரசு ஆர்.எஸ்.எஸ் கொள்கையை புகுத்த முயல்கிறது. பாஜக அரசு ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே குடும்ப அட்டை என்று பொதுமக்களுக்கு எதிராகவே உள்ளது. மேலும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற கூட்டாட்சித் தத்துவத்தை கைவிட்டு ஒற்றையாட்சித் தத்துவத்தை நோக்கி செல்கிறது.

இந்தியாவில் சிறந்த கல்வியை தமிழகம் கொடுத்து வருகிறது. 60 சதவீத கிராமப்புற மாணவர்களை புறக்கணிக்கும் விதமாக இக்கொள்கை உள்ளது. இரு மொழி கொள்கையிலிருந்து மும்மொழி கொள்கையை கொண்டுவர முயல்கிறது. இது இந்தி மொழியை திணிக்கும் திட்டமாகும்.

மாநில அரசுக்குக் கல்வி உரிமையை வழங்கினால்தான் அப்பகுதி மக்களுக்கு எது தேவை என முடிவெடுக்க முடியும். புதிய கல்விக் கொள்கை மூலம் மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

பாடம் நடத்த ஆசிரியர்கள் தேவையில்லை. தன்னார்வலர்கள் பாடம் நடத்துவார்கள் என்கிறார்கள். 'பெற்றோர் கல்வி' என்கிறார்கள். அதற்கு என்ன பொருள் என விளங்கவில்லை. ஆன்லைன் மூலமும், தொலைக்காட்சியிலும் பாடம் நடத்துவது மாநில அரசின் இயலாமையை காட்டுகிறது.

கல்விக்கொள்கை குறித்தத் திமுகவின் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்கவில்லை. கல்வித்துறையில் சர்வாதிகாரப்போக்கை மத்திய அரசு கடைபிடிக்கிறது. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. வழக்கம் போல மாநில அரசு பணிந்து போகாமல் இந்த கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்.

இந்திய உயர்கல்வி ஆணையம் தேவையற்றது. அதேபோல தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தை பல்கலைக்கழகத்துடன் இணைப்பது தேவையற்றது. வெளிநாட்டு பல்கலைக்கழகத்தைப் புகுத்துவதன் நோக்கம் என்ன?.ஆன்லைன் கல்வி நடைமுறைக்கு ஏற்றதல்ல. இதில் நல்ல திட்டம் எதுவும் கிடையாது. திமுக ஆட்சிக்கு வந்தால் இரு மொழி கொள்கையை மேலும் தொடர ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார்.

கரோனா காலத்தைப் பயன்படுத்தி மத்திய அரசு இத்திட்டத்தைப் புகுத்த முயல்கிறது. கல்லூரிகளில் தாய்மொழி கல்வியை கொண்டு வந்தது திமுக அரசு. 5-ம் வகுப்பு வரை தாய்மொழிக்கல்வி என்று வரையறை இருக்கக் கூடாது.

தி.பரங்கினி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி மாணவி தனலட்சுமிக்கு சாதிச்சான்று பெற்றுத்தர திமுக முயற்சிகள் மேற்கொள்ளும். மேலும், அம்மாணவி படிப்புக்கான உதவிகளை செய்யும்"

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x