Published : 31 Jul 2020 02:50 PM
Last Updated : 31 Jul 2020 02:50 PM

மெட்ரோ ரயில்  நிலையங்களுக்கு அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர் சூட்டல்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

மெட்ரோ ரயில் நிலையங்களில் குறிப்பிட்ட வழித்தடங்களுக்கு மறைந்த முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்கள் சூட்டப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கை:

“2003 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசால் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அந்த ஆய்வின் அடிப்படையில் வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமான நிலையம் வரையிலான 23 கிலோ மீட்டர் தூர வழித் தடம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் பரங்கிமலை வரையிலான 22 கிலோ மீட்டர் தூர வழித் தடம் என இரு வழித்தடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. 18,380 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இத்திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டது.

* 29.6.2015 அன்று, கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான 10.15 கிலோ மீட்டர் உயர்த்தப்பட்ட வழித்தடத்தில் பயணிகள் சேவை தொடங்கப்பட்டு, கோயம்பேடு பணிமனையுடன், கோயம்பேடு, சென்னை புறநகர் பேருந்து நிலையம் (சிஎம்பிடி), அரும்பாக்கம், வடபழனி, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல் மற்றும் ஆலந்தூர் ஆகிய 7 மெட்ரோ நிலையங்கள் திறக்கப்பட்டன.

* 23.7.2016 அன்று வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் - விம்கோ நகர் வரையிலான 3,770 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், 9.05 கிலோ மீட்டர் நீளமுள்ள சென்னை மெட்ரோ ரயிலின் முதல் கட்ட நீட்டிப்புத் திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டன.

* 21.9.2016 அன்று சென்னை விமான நிலையம் முதல் சின்னமலை வரையிலான 8.6 கிலோ மீட்டர் நீளத்திலான வழித்தடப் பகுதி மற்றும் ஆலந்தூர் முதல் பரங்கிமலை வரையில் 1.2 கிலோ மீட்டர் நீளத்திலான வழித்தடப் பகுதிகளில் பயணிகள் சேவை தொடங்கப்பட்டு, சென்னை விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் சாலை, கிண்டி, சின்னமலை மற்றும் பரங்கிமலை ஆகிய 6 மெட்ரோ நிலையங்கள் திறக்கப்பட்டன.

* சென்னை பெருநகர் பகுதியில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு 54 கி.மீ. நீளத்திலான சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம்-1 மற்றும் கட்டம்-1-ன் நீட்டிப்பு வழித்தடங்கள் போதாது என்பதால், கட்டம்-2 க்கான விரிவான சாத்தியக்கூறு மற்றும் திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு செப்டம்பர் 2014-ல் ஆணைகள் வழங்கப்பட்டன.

* 14.5.2017 அன்று கோயம்பேடு முதல் நேரு பூங்கா வரையிலான 7.4 கிலோ மீட்டர் நீளத்திலான முதல் சுரங்க வழித்தடப் பகுதியில் பயணிகள் சேவை தொடங்கப்பட்டு, திருமங்கலம், அண்ணாநகர் கோபுரம், அண்ணாநகர் கிழக்கு, செனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மற்றும் நேரு பூங்கா ஆகிய 7 மெட்ரோ நிலையங்கள் திறக்கப்பட்டன.

* 25.5.2018 அன்று, நேரு பூங்கா முதல் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் வரையிலான 2.5 கிலோ மீட்டர் நீளத்திலான சுரங்க வழித்தடத்திலும், சின்னமலை முதல் ஏ.ஜி.-டி.எம்.எஸ் வரையிலான 4.35 கிலோ மீட்டர் நீளத்திலான சுரங்க வழித்தடத்திலும் பயணிகள் சேவை தொடங்கப்பட்டு, எழும்பூர் மெட்ரோ, சென்ட்ரல் மெட்ரோ, சைதாப்பேட்டை மெட்ரோ, நந்தனம், தேனாம்பேட்டை மற்றும் ஏ.ஜி.-டி.எம்.எஸ் ஆகிய 6 மெட்ரோ நிலையங்கள் திறக்கப்பட்டன.

* 10.2.2019 அன்று திருப்பூரில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடியால் காணொலிக் காட்சி மூலம் ஏ.ஜி.-டி.எம்.எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான 10.9 கிலோ மீட்டர் நீளத்திலான சுரங்க வழித்தடத்தில் பயணிகள் சேவை தொடங்கப்பட்டு, ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி, அரசினர் தோட்டம், சென்ட்ரல் மெட்ரோ, உயர் நீதிமன்றம், மண்ணடி மற்றும் வண்ணாரப்பேட்டை ஆகிய 7 மெட்ரோ நிலையங்கள் திறக்கப்பட்டன.

* கட்டம்-2-ல் மாதவரம் முதல் சிப்காட் வரையிலும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் மொத்தம் 118.9 கி.மீ நீளத்திலான மூன்று வழித்தடங்கள் மற்றும் 128 மெட்ரோ நிலையங்களுடன் 61,843 கோடி ரூபாய் செலவு மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கு அரசு ஆணை வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் நிதி பங்களிப்பு கோரப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் - கட்டம்-1-ன் கீழ், ஆலந்தூர் மெட்ரோ, சென்ட்ரல் மெட்ரோ மற்றும் புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ நிலையங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும், பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளன.

மேற்கண்ட மெட்ரோ நிலையங்களின் பெயர்களை நமது மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரை சிறப்பிக்கும் வகையில் மாற்றி அமைக்கலாம் என்ற உயர்மட்டக் குழுவின் பரிந்துரையை ஏற்று,

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு அண்ணா பன்னாட்டு முனையம் என்று பெயரிட்டதைப் போல், ஆலந்தூர் மெட்ரோ – Alandur Metro என்பது "அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ" என்றும் ;

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்’ என்று பெயர் வைத்ததைப் போல சென்ட்ரல் மெட்ரோ என்பது "புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ" என்றும்;

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆசியாவில் மிகப்பெரிய பேருந்து முனையமான சென்னை புறநகர் பேருந்து நிலையத்தையும், அங்கு அமைந்துள்ள மெட்ரோ நிலையத்தையும் திறந்து வைத்ததாலும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட எடுத்த பல்வேறு நடவடிக்கைகளை நினைவுகூரும் வகையில், புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ (CMBT Metr) என்பது "புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ" என்றும் பெயர் மாற்றங்கள் செய்து நான் ஆணையிட்டுள்ளேன்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்..

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x