Published : 31 Jul 2020 01:37 PM
Last Updated : 31 Jul 2020 01:37 PM

காவலர் தேர்வில் வெற்றிபெற்று நியமனம் பெறாதோருக்கு பணி வழங்க வேண்டும்; ராமதாஸ்

காவலர் தேர்வில் வெற்றி பெற்று நியமனம் பெறாதோருக்குப் பணி வழங்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூலை 31) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாடு காவல்துறையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கரோனா பரவல் அதிகமுள்ள காலத்தில், காவலர் தேர்வுகளை நடத்த முடியாது என்பதால், புதிய வாய்ப்புகளை அரசு ஆராய வேண்டும். ஏற்கெனவே காவலர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று பணி நியமனம் பெறாதவர்களைப் புதிய காலியிடங்களில் நியமிப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆள் தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 10 மாதங்கள் நடைபெற்ற உடற்தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு ஆகியவற்றைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 8,773 இரண்டாம் நிலைக் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்கள் தவிர மேலும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் உடற்தகுதித் தேர்விலும், எழுத்துத் தேர்விலும் வெற்றி பெற்றிருந்தனர். அவர்களின் பெயர்கள் தரவரிசைப் பட்டியலிலும் இடம் பெற்றிருந்தன. ஆனாலும், அந்த நேரத்தில் காலியிடங்களின் எண்ணிக்கை 8,773 என்ற அளவில் மட்டுமே இருந்ததால், அந்த எண்ணிக்கையிலானவர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தரவரிசையில் இடம்பெற்றிருந்த மீதமுள்ளவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

காவல்துறை பணிக்கான ஆள் தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளில் இருந்து, ஆள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாள் வரை ஏற்படும் புதிய காலியிடங்களும், மொத்த காலியிடங்களில் சேர்க்கப்பட்டு, அதற்கேற்ற வகையில் கூடுதல் எண்ணிக்கையில் காவலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்.

ஆனால், 2019 மார்ச் முதல் 2020 பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் ஏற்பட்ட புதிய காலியிடங்கள் ஏற்கெனவே இருந்த காலியிடங்களில் சேர்க்கப்படவில்லை. அவ்வாறு புதிதாக உருவான 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் சேர்க்கப்பட்டிருந்தால், தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்று இருந்த அனைவருக்கும் காவலர் பணி கிடைத்திருக்கக்கூடும். ஆனால், அவ்வாறு செய்யப்படாததால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு காவலர் பணியில் சேரும் வாய்ப்பு நழுவியிருக்கிறது.

தமிழக காவல்துறையில் 10 ஆயிரத்திற்கும் கூடுதலான காவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அதிகாரபூர்வமாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இன்றைய சூழலில் காவலர்களின் தேவை அதிகமாக உள்ளது. குறிப்பாக, கரோனா காலத்தில் ஊரடங்கை நிர்வகிக்கவும் அதிக எண்ணிக்கையில் காவலர்கள் தேவைப்படுகின்றனர்.

அதனால்தான் காவலர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் இருந்த இரண்டாம் நிலைக் காவலர்களை, பயிற்சி முடிவடைவதற்கு முன்பே களப்பணியில் தமிழக அரசு ஈடுபடுத்தியது. இன்றைய சூழலில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்புவது சாத்தியமில்லை. அதற்கு கரோனா நோய்ப்பரவல் அச்சம் இடம் கொடுக்காது.

அதுமட்டுமின்றி, நிலைமை சீரடைந்து அடுத்த காவலர் தேர்வு நடைபெறும்போது, இவர்களில் பலர் அதிகபட்ச வயது வரம்பைக் கடந்து விடுவார்கள். அதனால், அவர்களுக்கு ஒருவாய்ப்பு வழங்க வேண்டும். எனவே, ஏற்கெனவே உடற்தகுதித் தேர்விலும், எழுத்துத் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ள 10 ஆயிரத்துக்கும் கூடுதலான இளைஞர்களை நேரடியாக காவலர் பணியில் நியமிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x