Published : 31 Jul 2020 12:33 PM
Last Updated : 31 Jul 2020 12:33 PM

மதுரை மாநகராட்சிப் பகுதியில் அதிகரிக்கும் கரோனா உயிரிழப்பு: கிராமங்களுக்குப் படையெடுக்கும் நகர்ப்புற மக்கள்

மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று நோய்க்கு மாநகராட்சியில் மட்டுமே 179 பேர் உயிரிழந்துள்ளனர். இது மாவட்டத்தில் மொத்த உயிரிழப்பான 222 பேரில் 80.63 சதவீதம் ஆகும்.

இதனால், மதுரை மாநகராட்சிப் பகுதியில் வசிப்போர் கிராமங்களை நோக்கி நகர்வது அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்று நோய் கட்டுக்குள் வராவிட்டாலும் இந்தத் தொற்று நோயால் பாதிக்கப்படுகிறவர்கள் விரைவாக குணமடைகின்றனர். உயிரிழப்பும் குறைவாகவே இருக்கிறது.

அதனால், மக்கள் நோய்த் தொற்று வந்தாலும் அதை எதிர்கொண்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் நேற்று வரை 2, 34, 114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் 10,618 பேருக்கு தொற்று ஏற்பட்டு 4-வது இடத்தில் உள்ளது. இதில் மாநகராட்சியில் மட்டுமே 8, 174 பேர் இந்தத் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது மாவட்ட அளவில் மொத்தம் பாதித்தவர்களில் 79 சதவீதம் பேர் ஆகும். அதுபோல் சிகிச்சை பலனளிக்காமல் மாவட்டத்தில் மொத்தம் 222 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் மாநகராட்சியில் மட்டுமே 179 பேர் உயிரிழந்துள்ளனர். இது மாவட்ட அளவில் மொத்த உயிரிழப்பில் 80.63 சதவீதம் பேர் ஆகும்.

மதுரையில் தினமும் சராசரியாக 8 முதல் 10 பேர் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் மாநகராட்சியைச் சேர்ந்தவர்கள். அதே நேரத்தில் இந்த நோயில் இருந்து மீண்டு வீட்டிற்கு திரும்புவோர் எண்ணிக்கையும் மதுரை மாவட்டத்தில் அதிகமாகவே இருக்கிறது. இதுவரை 7,995 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த ஆண்டு 2019-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை மதுரை மாநகராட்சியில் பல்வேறு நோய்கள் காரணமாக 19,460 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், குறிப்பாக ஜனவரி முதல் ஜூலை வரை 11,649 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதே இந்த 2020ம் ஆண்டில் ஜனவரி முதல் ஜூலை 17-ம் தேதி வரை 7917 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், கடந்த மார்ச் முதல் தற்போது வரை கரோனாவில் மட்டும் 179 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை கூறுகிறது.

இந்நிலையில் மதுரை மாநகராட்சி 100 வார்டுகளில் கரோனா தொற்றும் உயிரிழப்பும் அதிகமாக இருப்பதால் நகர்ப்புறங்களில் வசிப்போர், கிராமங்களுக்கு குடும்பத்தோடு இடம்பெயர்துள்ளனர்.

வசதிப்படைத்தவர்கள், தங்கள் பண்ணை தோட்டங்கள், ஏற்கெனவே புறநகர் பகுதிகளில் வாங்கிப்போட்ட வீடுகளில் தற்காலிகமாக குடும்பத்தோடு தங்கியுள்ளனர்.

மற்றவர்கள் தங்கள் உறவினர்கள் வீடுகளுக்கும், சொந்த கிராமங்களுக்கும் இடம்பெயர்ந்துள்ளனர். கரோனா முடிந்ததும், மீண்டும் நகர்புறங்களுக்கு வருவதற்கு அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x