

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து மரணம் ஏற்படக் காரணமாக இருந்த வழக்கில், பெரம்பலூர் திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமாரை விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2006 முதல் முதல் 2011 ஆம் ஆண்டு வரை பெரம்பலூர் தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்தவர் ராஜ்குமார். இவரது வீட்டில், கேரள மாநிலம் இடுக்கி பீர்மேடு பகுதியைச் சேர்ந்த தொழிலாளியின் 15 வயது மகள் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், அந்தச் சிறுமியை எம்எல்ஏ ராஜ்குமார் உள்பட அவரது நண்பர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதைத்தொடர்ந்து அச்சிறுமி உயிரிழந்ததாகவும் வழக்குத் தொடரப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது.
இதனை அடுத்து, முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார், அவரது நண்பர்கள் ஜெய்சங்கர், அன்பரசு, மகேந்திரன், விஜயகுமார், அரிகிருஷ்ணன், பன்னீர்செல்வம் ஆகிய 6 பேர் மீது ஆள்கடத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை பெரம்பலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சென்னையில் திறக்கப்பட்ட, எம்.பி - எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற்று வந்த வழக்கில் முன்னாள் திமுக எம்எல்ஏ ராஜ்குமார் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் மீதான புகார் உறுதி செய்யப்பட்டதால் அவர்களுக்குத் தலா 10 ஆண்டு சிறைத் தண்டனையும் 42 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ் குமார், இன்று (ஜூலை 31) முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜ்குமாரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும் தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.