

இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கந்த சஷ்டி கவசத்தைக் கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், யூடியூப், முகநூல், ட்விட்டர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்க மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யூடியூப் சேனல் ஒன்றில், கந்த சஷ்டி கவசம் குறித்த விமர்சனங்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த சேனலை நிர்வகித்து வந்த சுரேந்திரன், செந்தில் வாசன் உள்ளிட்டோர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கந்த சஷ்டி கவசம் குறித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், யூடியூப், முகநூல், ட்விட்டர் நிறுவனங்கள் மீதும், சுரேந்திரன் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கரோனா பேரிடரால் ஏற்கெனவே உலகமே தத்தளித்து வரும் சூழலில், தற்போது யூடியூப், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் வெறுப்புப் பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அரசியல் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் தொடங்கி கடவுள்கள் வரை அவமதிக்கப்படுவதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
தனிநபர்கள் சிலர், தங்களுடைய பேச்சுகள் மற்றும் கட்டுரைகளால் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வன்முறையைத் தூண்டும் உள்ளடக்கங்கள் அடங்கிய செய்திகளை சமூக வலைதளங்களில் பதிவிடக் கூடாது என சமூக வலைதளங்கள் விதிகளை வகுத்துள்ளபோதும், இதுபோன்ற வீடியோக்கள் தொடர்ந்து பதிவிடப்படுவதாகவும், அவற்றை நீக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் குற்றம்சாட்டி உள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு சமூக வலைதளங்களைக் கண்காணிக்கவும், மாநில சைபர் கிரைம் பிரிவை வலுப்படுத்தவும் மத்திய அரசு விதிகளை வகுத்துள்ளதாகவும், அந்த விதிகளைப் பின்பற்றி இருந்தால், இது போன்ற சட்டவிரோத நிகழ்வுகள் தடுக்கப்பட்டிருக்கும் எனவும் கூறியுள்ளார்.
கந்த சஷ்டி கவசம் தொடங்கி மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் இதுபோன்ற வீடியோக்களை வெளியிட யூடியூப், முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை இன்று (ஜூலை 31) விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு, மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.