Published : 12 Sep 2015 11:42 AM
Last Updated : 12 Sep 2015 11:42 AM

இலவச தொலைபேசியில் பெறப்படும் ஆட்டோ மீட்டர் கட்டண புகாருக்கு பதிவு எண் வழங்க வலியுறுத்தல்

ஆட்டோ மீட்டர் கட்டணம் தொடர்பாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளருக்கு, புகார் அளித்ததற்கான அத்தாட்சியாக பதிவு எண் வழங்க வேண்டும் என கோயமுத்தூர் நுகர்வோர் குரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கோவையில் மீட்டர் கட்டணத்தை அமல்படுத்துவது தொடர்பாக, நுகர்வோர் குரல் அமைப்பு மூலமாக தொடரப்பட்ட வழக்கில் கட்டாயமாக மீட்டர் கட்டணத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து, குறைந்தபட்ச ஆட்டோ மீட்டர் கட்டணம் ரூ.25-ம், கி.மீ-க்கு ரூ.12-ம் வசூலிக்க ஆட்டோக்களுக்கு உத்தரவிடப்பட்டது. இருப்பினும், மாநகர போக்குவரத்து போலீஸார், போக்குவரத்துத் துறை அலுவலர்கள் ஒத்துழைப்பு இல்லாததால், கோவை நகரில் ஆட்டோ மீட்டர் கட்டண நடைமுறை சரியாக இல்லை. மீட்டர் கட்டணத்தை கடுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் நுகர்வோர் குரல் அமைப்பு மனு தாக்கல் செய்தது.

இதனை விசாரித்த நீதிமன்றம், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை சீராக அமல்படுத்துவது தொடர்பாக கடந்த ஓராண்டாக போக்குவரத்துத் துறையும், காவல்துறையும் இணைந்து எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து தமிழக அரசு வரும் அக்டோபர் 8-ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், ஆட்டோ மீட்டர் கட்டணம் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க போக்குவரத்துத் துறை சார்பில் 1800-425-5430 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவித்தால், சம்பந்தப்பட்ட இடத்தின் வட்டாரப் போக்குவரத்து அலுவலர், போலீஸாருக்கு புகார் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், புகார் எண்ணுக்கு தொடர்பு கொண்டு நுகர்வோர் புகார் தெரிவித்தால், புகார் தெரிவித்ததற்கான அத்தாட்சியாக பதிவு எண் எதுவும் வழங்கப்படுவது இல்லை. எனவே, புகார் பதிவு எண் அளிக்க வேண்டும் என நுகர்வோர் குரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் செயலாளர் என்.லோகு கூறும்போது, ‘தமிழக அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் சேவை வரவேற்கத்தகுந்தது. இருப்பினும், நுகர்வோர் புகார் தெரிவிக்கும்போது, புகார் பதிவு எண் அவருக்கு வழங்கப்படுவது இல்லை. பெயர், முகவரி மட்டுமே வாங்கிக் கொள்கிறார்கள்.

இதை வைத்துக் கொண்டு காவல்துறை அல்லது போக்கு வரத்துத் துறை அணுகினால் சரியான தீர்வு கிடைக்காது. எனவே, புகார் பதிவு எண்ணை உடனடியாக வழங்க வேண்டும். நுகர்வோர் தெரிவிக்கும் புகார் குறித்து போக்குவரத்துத் துறையும் காவல்துறையும் இணைந்து உடனடியாக சம்பந்தப்பட்ட ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x