

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறையால், முறையான சிகிச்சை பெறமுடியாமல், நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் 3,000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுமட்டுமன்றி கரோனாவுக்காக 350 படுக்கையுடன் கூடிய சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே மருத்துவமனையில் 900 செவிலியர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில், 160 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இதிலும் 20-க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரோனாவுக்காக தமிழக அரசால் 158 செவிலியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். ஆனால் 35 பேர் மட்டுமே பணியில் சேர்ந்தனர். மற்றவர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. செவிலியர்களின் பற்றாக்குறையால் நோயாளிகளை கவனித்து மருத்துவம் அளிக்க முடியாமல் சிரமம் ஏற்படுகிறது. கூடுதல் பணியால், தங்களின் உடல்நிலை அடிக்கடி பாதிக்கப்படுவதாக பணியில் உள்ள செவிலியர்கள் கூறுகின்றனர்.
கூடுதல் செவிலியர்களை நியமிக்க கோரி, பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறைந்த ஊதியம், பணி பாதுகாப்பின்மை, உயிருக்கு உத்தரவாதம் இன்மை போன்ற காரணங்களால் செவிலியர்கள் பணியில் சேரவில்லை என தெரிகிறது. கூடுதல் செவிலியர்களை நியமிக்க, அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இதுகுறித்து செவிலியர்கள் சிலர் கூறியதாவது: இந்திய மருத்துவக் கவுன்சில் நிர்ணயித்துள்ளபடி செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் தேவையான செவிலியர் காலி பணியிடங்களை நிரப்பக் கோரி பலமுறை அரசுக்கு மனு கொடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் எந்தப் பயனும் இல்லை.
மேலும் குறைந்தபட்ச தொகுப்பூதியமாக ரூ.14 ஆயிரம் வரை மட்டுமே வழங்கப்படுகிறது. நீதிமன்றம் ரூ.25 ஆயிரம் ஊதியம் வழங்க அறிவுறுத்தியும் தமிழக அரசுஅதை நடைமுறைப்படுத்தவில்லை. குறைந்த செவிலியர்களை கொண்டு அதிக வேலை வாங்குவதால் பணிச்சுமை அதிகம் உள்ளது. எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு, மருத்துவமனையில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்ப அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.