

வரலட்சுமி நோன்பு, ஆடி வெள்ளி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளில் அம்மனுக்கு புடவை எடுத்து படைப்பது வழக்கம். இதனால் சென்னை, காஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள கடைகளில் புடவை மற்றும் பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். காஞ்சிபுரம் காந்தி சாலை முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா அச்சத்தால் ஊரடங்கு அமலில் உள்ளது. கடைகள் திறக்கப்பட்டிருந்தாலும் சமூக இடைவெளியை கடைபிடித்தே பொதுமக்கள் பொருட்களை வாங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
சமூக இடைவெளியின்றி..
ஆயிரக்கணக்கான மக்கள் ஒரேநேரத்தில் குவிந்ததால் சமூக இடைவெளியை கடைபிடிக்கச் செய்ய முடியாமல் பல்வேறு கடைகளில் ஊழியர்கள் திணறினர். பெரும்பாலும் துணிக்கடைகளில் அதிக அளவு மக்கள் கூடினர். தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள், கூட்டம் அதிகம் உள்ள துணிக்கடைகளில் ஒரே நேரத்தில் மக்களை அனுமதிக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக அனுப்பி சமூக இடைவெளியுடன் விற்பனை நடப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தினர். சென்னை மயிலாப்பூரில் உள்ள மாட வீதியில் பூ, பழம் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு பூ, பழம் மற்றும் பூஜை பொருட்களை வாங்க நேற்று காலை முதல் பொதுமக்கள் வர தொடங்கினர்.
பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணிந்து வந்திருந்தனர். இருப்பினும், சமூக இடை வெளியைக் கடைபிடிக்காமல் ஒருவருக்கு ஒருவர் அருகிலேயே நின்று பூ, பழம் மற்றும் பூஜை பொருட்களை வாங்கிச் சென்றனர். இதனால், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது கேள்விக்குறியானது. இதேபோல், வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிக்க பூ, பழம் மற்றும் பூஜை பொருட்களை வாங்க சென்னை முழுவதும் உள்ள ஒருசில சந்தைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.