

விவசாயத்துக்கு இலவச மின் இணைப்புபெற, மோட்டார் வாங்கிய ரசீதுடன் மின்வாரிய அலுவலகத்தை அணுகுமாறு மின்வாரியம் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் 600 பேரில் 250 பேருக்கு மட்டுமே வழங்கியதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் 4.25 லட்சம் விவசாயிகள் விவசாய மின் இணைப்புக்கு காத்திருப்பதாகவும் இந்த ஆண்டு 50,000 மின் இணைப்புகள் வழங்கப்படும் என்றும் மின்துறை அமைச்சர் தங்கமணி அறிவித்தார். ஆனால், அறிவிப்பு வெளியாகி இரண்டரை மாதங்களுக்கு மேலாகியும்கூட, எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில் தற்போது இலவச மின்சாரத்துக்கு விண்ணப்பித்த விவசாயிகள், மோட்டார் வாங்கிய ரசீதுடன் அலுவலகத்தை தொடர்புகொள்ள வாரியம் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. செங்கல்பட்டு கோட்டத்துக்கு 250 மின் இணைப்புக்கு மட்டுமே வாரியம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் சுமார் 600 விவசாயிகள் விண்ணப்பித் திருந்த நிலையில், விண்ணப்பித்த அனைவருக்குமே வாரியம் நோட்டீஸ் வழங்கி உள்ளது. இதில் மதுராந்தகத்தில் மட்டும் 218 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இது விவசாயிகளிடையே குழப்
பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:
செங்கல்பட்டு வட்டத்தில் 600 பேர் விண்ணப்பித்தோம். ஆனால் 250 இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. வசதி இல்லாததால்தான் இலவச இணைப்பு கேட்கிறோம். வசதி உள்ளவர்கள் மோட்டார் வாங்கி இணைப்பு பெற்றுக்கொள்வார்கள். சிறுகுறு விவசாயிகளான நாங்கள் பாதிக்கப்படுகிறோம். மேலும் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் லஞ்சம் கொடுப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் நிலையும் ஏற்படும். எனவே அரசு விண்ணப்பித்த அனைவருக்கும்வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து செங்கல்பட்டு மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராஜத்தி கூறியதாவது: 2000-ம் ஆண்டு முதல் சுமார் 550-க்குமேல் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அரசு 235 விவசாயிகளுக்கு இலவச இணைப்புக்கு அனுமதி வழங்கியுள்ளது. விதிமுறைக்கு உட்பட்டு விண்ணப்பம் செய்தவர்களில் முதலில் வருகிறவர்களுக்கு இணைப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.