Published : 31 Jul 2020 07:08 AM
Last Updated : 31 Jul 2020 07:08 AM

‘ப்ளூ டூத், ஹெட் செட்’ இணைக்கப்பட்ட முகக்கவசம்: செல்போனுடன் இணைத்து பயன்படுத்தும் வசதி

‘ப்ளூ டூத், ஹெட்செட்’ முகக்கவசம்.

கோவை

செல்போனுடன் பயன்படுத்தும் வகையில், ‘ப்ளூ டூத், ஹெட்செட்' இணைக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ள முகக்கவசம் வாடிக்கையாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

கரோனா வைரஸ் தொற்றுபரவல் காரணமாக, முகக்கவசம்அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கரோனாவை தடுக்கும் வகையில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இருமல், தும்மல் மற்றும் பேசும்போது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு கிருமிகள் பரவுவதைத் தடுக்கும் வகையிலான முகக்கவசங்கள், தற்போது பல்வேறு ரகங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இரண்டு லேயர்,மூன்று லேயர் கொண்டவை, பருத்தி துணியால் தயாரிக்கப்பட்டவை, என்.95 என பல வகை முகக்கவசங்கள் பயன்பாட்டில் உள்ளன.

இந்நிலையில், ‘ப்ளூ டூத், ஹெட்செட்டை’ இணைத்து, துணியாலான முகக்கவசம் கோவையில் விற்பனைக்கு வந்துள்ளது.

இதுகுறித்து முகக்கவச விற்பனையாளர்கள் கூறும்போது,"உள்நாட்டைச் சேர்ந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த முகக்கவசம் 3 அடுக்கு துணிகளைக் கொண்டது. இதன் உட்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள உறையில் ‘ப்ளூ டூத்’ கருவியும்,அதனுடன் இரு காதுகளிலும் மாட்டக்கூடிய வகையிலான ‘ஹெட்செட்டும்’ பொருத்தப்பட்டுள்ளன. செல்போனில் உள்ள ‘ப்ளூடூத்’ ஆப்ஷன் மூலம், முகக்கவசத்தில் உள்ள ‘ப்ளூ டூத்’ கருவியை இணைத்து, முகக்கவசம் அணிந்தபடியே செல்போன் அழைப்புகளை ஏற்றுப் பேசலாம். பிறரை செல்போனில் அழைத்துப் பேசவும் முடியும்.

வாகனங்களில் செல்லும்போதும், பணியின் போதும் எவ்வித இடையூறுமின்றி இந்த முகக்கவசத்தைப் பயன்படுத்தலாம். முகத்துக்கு தொந்தரவு அளிக்காத வகையில், காதிலும், தலையிலும் மாட்டிக் கொள்ளும் வகையிலான நைலான் கிளிப் இதில் உள்ளது.

அணிவதற்கு எளிதாகவும், சீரான முறையில் காற்றை சுவாசிக்கும் வகையிலும் இது தயாரிக்கப்பட்டுள்ளது.

சார்ஜ் 8 மணி நேரம் பயன்பாடு

இதிலுள்ள ‘ப்ளூ டூத், ஹெட்செட்’ கருவியை தனியாக வெளியேஎடுத்து வைத்துவிட்டு, முகக்கவசத்துணியை துவைக்கலாம். இதில் உள்ள ‘ப்ளூடூத்’ கருவியை ஒருமுறை சார்ஜ் செய்தால், 8 மணிநேரம் பயன்படுத்தலாம். இந்தமுகக்கவசத்தின் விலை ரூ.365. வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த முககவசம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது’’ என்றனர். டி.ஜி.ரகுபதி


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x