Published : 31 Jul 2020 07:08 AM
Last Updated : 31 Jul 2020 07:08 AM

கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்க்க திமுக கூட்டத்தில் தீர்மானம்

சென்னை

கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் நேற்று மாலை 4.30 மணியளவில் காணொலி மூலம் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, துணைத் தலைவர் கனிமொழி, சட்டப்பேரவை திமுக கொறடா அர.சக்கரபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது.

இந்தி கட்டாயம் அல்ல என்றுகல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், மும்மொழித் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற மத்திய அரசின் கல்விக் கொள்கை, தமிழகத்தின் இருமொழிக் கொள்கைக்கு விரோதமானது. எனவே, இதனை ஏற்க முடியாது.

1 முதல் 5-ம் வகுப்பு வரைதாய்மொழியில் கல்வி என்பது ஏற்கப்பட்டுள்ளது. இது திமுகவின்தொலைநோக்குப் பார்வைக்கு கிடைத்த வெற்றி. அதேநேரத்தில் சமஸ்கிருதத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம், மற்றஇந்திய மொழிகள் மீது கொண்டுள்ள மாற்றாந்தாய் மனப்பான்மையை உணர்த்துகிறது.

3,5,8-ம் வகுப்புகளுக்குத் தேர்வு, ‘பிளஸ் டூ’ கல்விமுறையில் மாற்றம், ‘குலக்கல்வி’த் திட்டத்தின் மறு வடிவமான தொழிற்கல்வி உள்ளிட்டவை மாநிலங்களிடம் எஞ்சியிருக்கும் கல்வி உரிமையிலும் தேவையே இல்லாமல் தலையிடும் மேலாதிக்கப் போக்காகும்.

உயர் கல்வி ஆணையம் அமைப்பது, கலை, அறிவியல் பட்டயப்படிப்புகளில் சேரவும் நுழைவுத் தேர்வு, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை அனுமதிப்பது, மாநிலங்களில் கற்றுக் கொடுக்க வேண்டிய பாடங்களை தேசிய அளவில் வகுப்பது ஆகியவை மாநில உரிமைகளைப் பறிக்கும் செயலாகும்.

பொதுப்பட்டியலில் உள்ள கல்வி, மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டு வரப்பட வேண்டும். நாடாளுமன்றம் கூடி விவாதிக்கும் வரை புதிய தேசியக் கொள்கையை நடைமுறைப்படுத்தக்கூடாது. இதன் இறுதி வடிவத்தைஉடனடியாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்தக் கல்விக்கொள்கையை ஏற்க மாட்டோம்என்று அதிமுக அரசு தீர்மானமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x