

மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் அத்தியாவசியம் போல தொழில்நுட்பம் அடிப்படையாகி விட்டது. பிறப்பு முதல் இறப்பு வரை அறிவியலும், தொழில்நுட்பமும் நிழல்போல் நம்மைப் பின் தொடர்கின்றன. ஒரு தகவல் கடல் கடந்து, நாடு கடந்து வேறொருவரிடம் சென்றடைய நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் என இருந்த காலம் மாறி தற்போது நொடிப் பொழுதில் சென்றடைந்து விடுகிறது.
கரோனா ஊரடங்கால் தொழில் நுட்பத்தின் பயன்பாடு மேலும் இரட்டிப்பாகி விட்டது. ஆனால், பயனுள்ள தொலை தொடர்பு சாதனங்கள், செயலிகள், சமூக வலை தளங்களை தற்போது சிலர் தவறான நோக்கத்துக்காக பயன்படுத்துகின்றனர். இவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கூட, நடிகர் சரத்குமார் பேசுவது போன்று போலி அழைப்புகள் விடுக்கப்பட்டது குறித்து சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். இந்த வகை குற்றங்கள் ‘சைபர்’ குற்றங்கள். இதுபோன்ற குற்றங்கள் தற்போது அதிகரித்து வருவதாக போலீஸார் கவலை தெரிவித்துள்ளனர்.
அதன்படி, பிறரின் செல்போன் எண்களை ஹேக் செய்து புதுவகை சாஃப்ட்வேர் மூலம், ஒருவர் பேசுவதுபோல் மற்றொருவரிடம் போலியாக பேசி மோசடி செய்யும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இதுகுறித்து, சென்னை சைபர் கிரைம் போலீஸார் கூறியதாவது:
ஸ்பூஃபிங் அழைப்புகள் (Spoofing calls), கிரேசி அழைப்புகள் (Crazy call) உட்பட பல்வேறு சாஃப்ட்வேர்கள், செயலிகள் இணையதளத்தில் உள்ளன. இந்த வகை சாஃப்ட்வேர்களை பதிவிறக்கம் செய்து கொண்டு, குறிப்பிட்ட நபர்களின் செல்போன் எண்களை உள்ளீடு செய்து அவர்கள் பேசுவது போல் வேறு நபர்களுக்கு குரலை மாற்றி பேசி மோசடி நடக்கிறது. இது நெட்வொர்க்குக்கு எதிரான தாக்குதல் எனவும் கூறலாம். இந்தவகை இணைய குற்றவாளிகளைக் கண்டறிவது சற்று கடினம். ஆனாலும், இவர்கள் நீண்ட நாள் தப்பிக்க முடியாது.
இதேபோல், சிலரது வாட்ஸ் அப்களையும், சில ஹேக்கர்ஸ்கள் முடக்கி அதில், இருக்கும் தகவல்கள், தரவுகளை திருடி வருகின்றனர். இது தொடர்பாக நேற்று முன்தினம் சென்னை, போரூர் காவல் நிலையத்தில் அருள் என்பவர் புகார் அளித்துள்ளார். அதில், புது செல்போன் எண்ணில் இருந்து எனது வாட்ஸ்அப்புக்கு குறுந்தகவல் ஒன்று பரிமாறப்பட்டது. அதில், சற்று நேரத்தில் அந்த எண்ணிலிருந்து என்னை தொடர்பு கொண்ட நபர் வேறு ஒருவருக்கு அனுப்ப வேண்டிய தகவலை உங்கள் வாட்ஸ்அப் எண்ணுக்கு தவறுதலாக அனுப்பி விட்டேன். தயவு செய்து எனக்கு அதை திருப்பி அனுப்பி விடுங்கள் என மன்றாடி கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து நான் அந்த தகவலை சம்பந்தப்பட்ட நபருக்கு திருப்பி அனுப்பினேன். அடுத்த சில வினாடிகளில் எனது செல்போன் சுவிட்ச் ஆப் ஆனது. வாட்ஸ்அப் முடங்கி அதில் இருந்த தகவல்கள் அனைத்தும் மாயமாகின. இதே போல் மேலும் சிலருக்கு நிகழ்ந்துள்ளதாக குறிப்பிட்டு இருந்தார். இதுவாட்ஸ்அப் ஹேக் ஆகும். இப்படி ஹேக் செய்யப்படும் போது நமது அத்தனை தகவல்களும் எதிர் தரப்புக்கு சென்று விடும்.
நமது போனில் சேமித்து வைத்திருந்த புகைப்படம், வீடியோ உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் அவர்கள் எடுத்து கொள்வார்கள். பின்னர், இதை பயன்படுத்தி மிரட்டி பணம் பறிக்க அல்லது வேறு வகை குற்ற செயல்களுக்கு பயன்படுத்த வாய்ப்புள்ளது. குறிப்பாக பெண்களை குறிவைத்து சிலர் இதுபோல் செயல்படுகின்றனர். எனவே, இதில், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக காவல் துறையிடம் புகார் அளிக்க வேண்டும் என்றனர்.
காவல் ஆணையர் எச்சரிக்கை
சைபர் வகை குற்றச் செயல்களைத் தடுக்க விரைவில் புதிய திட்டம் வகுக்கப்பட உள்ளது. சமூக வலைதள பகிர்வுகளையும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். பிரபலங்கள், தனிநபர்களின் செல்போன் எண்களை ஹேக் செய்து வேறு நபர்களுக்கு போலி அழைப்புகள் விடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் எச்சரித்துள்ளார்.