

காஞ்சிபுரத்தில் பக்ரீத் பண்டிகைக்காக பசுக்களை வாங்கிச் சென்ற முஸ்லிம்களை தடுத்தபோது அவர்களுக்கும், இந்துஅமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விஷ்ணு காஞ்சி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
முஸ்லிம்களின் பண்டிகையான பக்ரீத் வரும்சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்காக காஞ்சிபுரம் ரெட்டிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் 7 பசு மாடுகளை ஏற்றிக் கொண்டு சரக்கு வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாகவந்த கோ ரக் ஷா அமைப்பைச் சேர்ந்த பக்த சீனுவாசன் என்பவர், மாடுகளை ஏற்றிச் சென்றவாகனத்தை தடுத்துள்ளார். அப்போது அங்குள்ள முஸ்லிம்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து பக்தசீனுவாசன் பாஜக நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். பாஜக நகரத் தலைவர் ஜெகதீசன் மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ரெட்டிப்பேட்டை பகுதிக்குச் சென்றனர். அப்போது முஸ்லிம்களுக்கும், இவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது.
உடனே, விஷ்ணு காஞ்சி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து இருதரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றனர். அப்போது முஸ்லிம்கள் தாங்கள் பக்ரீத் பண்டிகைக்காக மாடுகளை ஏற்றி வரும்போது இவர்கள் தடுப்பதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் புகார் கூறினர்.
பசு மாடுகள் உரிய அனுமதியுடன் ஏற்றிச் செல்லப்படுகிறதா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரக் ஷா அமைப்பைச் சேர்ந்த பக்த சீனுவாசன் மற்றும் பாஜகநிர்வாகிகள் புகார்தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தால் காஞ்சிபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.